மட்டக்களப்பு பட்டிப்பளைப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கெவிலியாமடு கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவின் கந்தர்மல்லிச்சேனை பிரதேசம் காலாகாலமாக சம்பிரதாயபூர்வமாக மட்டக்களப்பு பண்ணையாளர்களின் மேய்ச்சற்தரைப் பிரதேசமாகப் பாவிக்கப்பட்டு வந்த பிரதேசமாக அறியப்படுகின்றது.
தற்போது அப்பிரதேசத்தில் அண்மைய மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பான்மை மக்களால் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுவது குறித்து அண்மையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அவ்விடம் சென்று பார்வையிட்டு, இது தொடர்பில் பட்டிப்பளைப் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டதோடு, மாவட்ட செயலாளார் மற்றும் வன இலாகா அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டிருந்தும் தற்போது மீண்டும் அச்செயற்பாடு தொடர்வதாகத் தெரியவந்ததையடுத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவொன்று நேற்றைய தினம்(2.04.2021) மீண்டும் அப்பிரதேசத்திற்கு களவிஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது மேற்படி பிரசேத்தில் சிவில் பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகளினால் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்ளப்படுகின்றமை பிரதிநிதிகளால் அவதானிக்கப்பட்டது. அதன் பிற்பாடு அங்கு செய்கை மேற்கொள்ளும் சிவில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் கலந்துரையாடியதுடன், மேற்படி செய்கை தொடர்பில் அவர்களிடம் வினவப்பட்டது.
கடந்த காலங்களில் இப்பிரதேசத்தில் பெரும்பான்மைப் பொது மக்களால் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டதுடன், 2015ம் ஆண்டின் பின்னர் வனஇலாக அதிகாரிகளினால் இவை தடுத்து நிறுத்தப்பட்டிருந்தது எனவும் மீண்டும் தற்போது சிவில் பாதுகாப்புப் பிரிவினரால் இப்பிரதேசத்தில் மரமுந்திரிகைச் செய்கை மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அங்கு தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்டப் பாராளுன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சடடத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா.இசாணக்கியன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா, கிழக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் மா.நடராஜா, மண்முனை தென்ருவில் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர், மண்முனை தென்மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர், மண்முனை மேற்குப் பிரதேசசபைத் தவிசாளர் மற்றும் உபதவிசாளர், போராதீவுப் பற்றுப் பிரதேசசபைத் தவிசாளர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.