“அமெரிக்கத் தாக்குதல்களை விசாரணை செய்த பாணியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் நடத்தவேண்டும்.” – எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ

“அமெரிக்கத் தாக்குதல்களை விசாரணை செய்த பாணியில் உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் விசாரணைகளை அரசாங்கம் நடத்தவேண்டும்.” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை தண்டிப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கோட்டாபய – மஹிந்த அரசாங்கம், வழங்கிய வாக்குறுதிகளை இதுவரை நிறைவேற்ற அதிக தாமதம் செய்வது ஏன் என்றும் அவர்  கேள்வி எழுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான ஷஹ்ரான் காசீம், தாக்குதலை நடத்துவதற்கு முன்னர் இலங்கை அரசு புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சாலியை தொடர்புகொண்டிருந்தார் எனக் கடந்த மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது நளின் பண்டார குறிப்பிட்டிருந்தார்.

நளின் பண்டாவின் இந்தக் கருத்துக்கு எதிராக மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலி மேற்கொண்ட முறைப்பாட்டிற்கு அமைய நளின் பண்டாரவிடம் வாக்குமூலம் பெறுவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் அழைத்திருந்தனர்.

அந்த வகையில் இன்று முற்பகலில் குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டாரவிடம் பலமணிநேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைக்காக நளின் பண்டார முன்னிலையான போது அவருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரான எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த மேலும் சில உறுப்பினர்களும் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர் சஜித் பிரேமதாஸ,

ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மைகளை அரசாங்கமே அம்பலப்படுத்த வேண்டும். இந்த தாக்குதலுக்குப் பின்னால் உள்ள சூத்திரதாரிகள், உதவிசெய்தோரை கைது செய்து சட்டத்திற்கு முன் நிறுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனையளிப்பதற்கான கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

அதனை தேர்தல்காலத்தில் அரச தரப்பினரே வாக்குறுதியாகக் கூறிவந்தார்கள். தாக்குதலுக்குப் பின்னால் இருப்போர் அம்பலமாகவில்லை என்பதையே நாங்களும் மக்களும் நினைக்கின்றார்கள். உண்மையை கண்டறியவே மக்கள் ஆணையை இந்த அரசாங்கத்திற்கு வழங்கியிருக்கின்றனர்.

எமது அரசாங்கத்தின் காலத்தில்தான் ஆணைக்குழுவும் அமைக்கப்பட்டு தற்போது இந்த அரசாங்கத்தின் காலத்தில் அறிக்கை அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்து பின்பற்றப்பட்ட நடவடிக்கையை இந்த அரசாங்கமும் பின்பற்ற வேண்டும் என யோசனை முன்வைக்கின்றேன்.

ஈஸ்டர் தாக்குதல் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் மிகவும் தாமதமாகும். 2019ஆம் ஆண்டில் ஆட்சிக்குவந்த அரசாங்கம், புதிய விசாரணைக் குழுவை அமைத்து, வெளிநாட்டிலுள்ள நிபுணர்களை இணைத்துக்கொண்டு சில மாதங்களில் விசாரணையை நிறைவுபடுத்தியிருக்கலாம்.

கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கின்ற அதிருப்திகளையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம். ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளை நடத்தி உண்மையை அறிவதில் இந்த அரசாங்கம் இன்னும் தாமதிக்கின்றது. மக்களிடம் இருந்து தகவல்கள் மறைக்கப்படுகின்றதா? கர்தினாலின் கருத்துக்களே இன்று மிகத்தெளிவாக இருக்கின்றன. தீவிரவாத செயற்பாடுகள், போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்காக சிங்கப்பூரில் அமுல்படுத்தப்பட்டுள்ள தண்டனைகள், சட்டங்களே இங்கும் அமுல்படுத்தப்பட வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *