“யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்ற குற்றச்சாட்டிலேயே கைதுசெய்யப்பட்டார்.” என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஊடக நேர்காணல் ஒன்றின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அதில் அவரிடம் மணிவண்ணன் கைது தொடர்பாக கேட்கப்பட்ட போது ,
கேள்வி:- யாழ்ப்பாணம் முதுல்வர் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்ய முயன்றார் என்று எந்த அடிப்படையில் சொல்கின்றீர்கள்?
பதில்:- தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் காவல்துறை பயன்படுத்திய சீருடையை ஒத்த சீருடையைத்தான் யாழ்ப்பாணம் மாநகர சபைமுவல்வர் மணிவண்ணன் பயன்படுத்தியுள்ளார்.
கேள்வி:- இதே சீருடையைத்தானே கொழும்பு மாநகர சபையும் பயன்படுத்தியுள்ளதே?
பதில்:- கொழும்பு மாநகர சபையின் சீருடைக்கும் இதற்கும் வித்தியாசங்கள் உள்ளன. கொழும்பு மாநகர சபை மேற்படி திட்டத்தை சபையின் முழுமையான அனுமதியுடன் செயற்படுத்துகின்றது. ஆனால், யாழ்ப்பாணம் மாநகர சபையில், முவல்வர் மணிவண்ணனின் தனிப்பட்ட விருப்பில்தான் இந்தப் படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சீருடையும் அவரின் விருப்புக்கு அமைவாகவே தயாரிக்கப்பட்டுள்ளன. இது எமது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அத்துடன் மாநகர காவல் படைக்கோ அவர்களது சீருடைக்கோ மாநகர சபையின் அனுமதியை மணிவண்ணன் பெற்றுக் கொள்ளவில்லை. மாநகர சபையின் அதிகாரங்களை அவர் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
மேலும், யாழ். மாநகர காவல் படை காவற்துறையினரின் கடமைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்பட ஆரம்பித்தது. சமூக ஊடகங்களில் யாழ். மாநகர சபையின் சீருடையையும் விடுதலைப்புலிகளின் காவல்துறையின் சீருடையையும் ஒப்பிட்டுப் படங்கள் பகிரப்பட்டுள்ளன. இதனைத் தமிழ்த் தரப்பினரே சுட்டிக்காட்டியுள்ளனர்.” என்று அமைச்சர் சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்