யாழ்ப்பாணம் மாநகரைத் துாய்மையாக வைத்திருப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தவறான வியாக்கியானம் செய்து பொலிஸார் கைது செய்தபோது தனக்காகக் குரல் கொடுத்த அத்தனைபேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுவதாக யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.
மக்கள், உள்நாட்டு, பன்னாட்டு அரசியல் தலைவா்கள், சட்டத்தரணிகள், துாதுவராலயங்கள், ஊடகங்கள், புலம்பெயர் உறவுகள், நண்பர்கள், ஆதரவாளர்கள் என அனைவருக்கும் அவர் நன்றி கூறியுள்ளார்.
அத்துடன், ‘துாய்மையான நகரம் தூய்மையான கரங்கள்’ என நாம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைவாக நடந்துகொள்வதே யாழ். மாநகர மக்களுக்கான தனது பணியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், பணியை செம்மையாகவும், முன்மாதிரியாகவும் செய்வதற்கு எடுத்த முயற்சியை மிகத் தவறாக வியாக்கியானம் செய்து தன்னை கைதுசெய்தார்கள் என மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், என்னுடைய பயணம் மிக நேர்மையானது எனவும் வெளிப்படையானது என்பதுடன் மக்களுக்கானது என அவர் கூறியுள்ளார்.
மேலும், பாதை எப்படியானது என்பதைப் புரிந்துகொண்டே பயணத்தை ஆரம்பித்ததாகவும் எனவே, எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னுடைய பயணம் நின்றுவிடாது என்றும் மணிவண்ணன் குறிப்பிட்டுள்ளார்.