தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், தாய்மாரை இழிவுபடுத்தி ஆற்றிய உரையையடுத்து, கட்சி உறுப்பினர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார் என்று கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம், இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு அரசுக்கு அழுத்தங்கள் கொடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், பொகவந்தலாவையில் நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டிருந்தார்.
இந்த நிகழ்வில் அவர் ஆயிரம் ரூபா பெற்றுக்கொடுத்த விடயம் குறித்து பேசும்போது, அரசியல்வாதியொருவர் ஆயிரம் ரூபா விடயத்தில் காட்டிக் கொடுத்ததாகக் கூறியது மட்டுமல்லாது, தாயையும் மிக மோசமான வார்த்தைகளில் பேசியிருந்தார்.
இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்ததுடன், பலரும் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, அவர் தான் பேசிய வார்த்தை தவறானது என்றும், இனி இவ்வாறான தவறு இடம்பெறாது எனவும் காணொளிப் பதிவினூடாக தெரிவித்தார். எனினும், அவர் மன்னிப்பு என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பது பெரும் பேசுபொருளாகியது.
இதையடுத்து, கட்சி வட்டாரத்திலுள்ள பல பெண்களும், பெண் உறுப்பினர்களும் அவரது உரையில் பிழையிருப்பதாக கூட்டிக்காட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. கட்சி மட்டத்திலுள்ள பெண்கள் அவருடைய உரை தொடர்பாக பெரும் அதிருப்தியிலுள்ளனர் எனவும் குறித்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸுக்கு ஆதரவளிக்கும் பல பெண்கள் அமைப்புகளும், அவருடைய உரை குறித்து கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளதுடன், அவருடைய செயற்பாடு குறித்து கவலையடைவதாகவும் தெரிவித்துள்ளதாக அறியமுடிகின்றது.
அதேபோன்று, இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகளும் ஜீவன் தொண்டமானின் உரைக்கு கவலை தெரிவித்துள்ளதாகவும் கட்சி மட்டத்தில் இவ்வாறான பேச்சுகள் இடம்பெற்றாலும் பொதுவெளியில் இவ்வாறான வார்த்தைப் பிரயோகத்தை பயன்படுத்துவது பொருத்தமற்றது எனத் தெரிவித்துள்ளதாகவும் அறியக் கிடைக்கின்றது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சராக இருந்து கொண்டு, இவ்வாறான வார்த்தைப் பிரயோகங்களை பிரயோகிப்பது, அரசுக்குப் பெரும் பாதிப்பாக அமையக்கூடும் எனப் பல தரப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனால், ஜீவன் தொண்டமானை இராஜாங்க அமைச்சுப் பதவியிலிருந்து நீக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஜீவன் தொண்டமானின் உரை குறித்து, கட்சி மட்டத்தில் முக்கிய கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன எனவும், இதன்போது பலரும் தங்களுடைய அதிருப்தியைத் தெரிவிக்கவுள்ளனர் எனவும் அறியமுடிகின்றது.
ஜீவன் தொண்டமானின் உரையை அடுத்து, பல தரப்பினரும் தொலைபேசி அழைப்பினூடாகக் கட்சியினருக்குக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.