கடந்த வருடம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது “ ஜார்ஜ் பிளாய்ட் எனும் கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்டமையாகும்.
ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்த போலீஸ் அதிகாரி டெர்ரக் சவுவின் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த விசாரணை தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. தீர்வு குறித்து அம்மாகாண மக்கள் பெரிய எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த விசாரணையையொட்டி மின்சோட்டா மாகாணம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன இந்த நிலையில் மினசோட்டா மாகாணத்தில் கருப்பின வாலிபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மினியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் சென்டர் நகரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி கார் ஒன்றை தடுத்து நிறுத்திய போலீசார் காரை ஓட்டி வந்த கறுப்பினத்தைச் சேர்ந்த டான்ட் ரைட் (20) என்ற வாலிபரை கைது செய்ய முற்பட்டனர். ஆனால் டான்ட் ரைட் தான் எந்த தவறும் செய்யவில்லை என போலீசிடம் கூறிவிட்டு மீண்டும் காரில் ஏறி அமர்ந்தார்.
அவர் காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட தயாரான சமயத்தில் போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார். துப்பாக்கி குண்டு காயத்துடன் டான்ட் ரைட் காரை சிறிது தூரம் ஓட்டி சென்றார். பின்னர் அந்த கார் மற்றொரு கார் மீது மோதி நின்றது. இதையடுத்து போலீசார் சென்று பார்த்தபோது டான்ட் ரைட் காருக்குள் பிணமாக கிடந்தார். மேலும் அவருடன் காரில் பயணித்த பெண்ணொருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் துடித்துக்கொண்டிருந்தார். போலீசார் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதனிடையே கருப்பின வாலிபர் ஒருவர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் புரூக்ளின் சென்டர் நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. இது அங்கு பெரும் போராட்டத்துக்கு வழி வகுத்தது. நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி டான்ட் ரைட் சாவுக்கு நீதி கேட்டு போராடத் தொடங்கினர்.
புரூக்ளின் சென்டர் நகரில் உள்ள போலீஸ் தலைமையகம் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள் டான்ட் ரைட் பெயரை முழக்கமிட்டதோடு, போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் கலைந்து செல்லும்படி போலீசார் ஒலிபெருக்கிகள் மூலம் எச்சரித்தனர். ஆனால் அதற்கு செவி சாய்க்காத போராட்டக்காரர்கள் போலீசாரின் வாகனங்கள் மீது கற்களை வீசி எறிந்து தாக்கினர். இதனைத் தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையில் மோதல் வெடித்தது. போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர்.
இந்த வன்முறை புரூக்ளின் சென்டர் நகர் முழுவதும் பரவி ஆங்காங்கே போலீசாரும் போராட்டக்காரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர். இதனால் அந்த நகரம் முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.
இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மினசோட்டா மாகாண ஆளுனர் டிம் வால்ஸ், புரூக்ளின் சென்டர் நகரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தார்.
மேலும் அந்த நகரில் தேசிய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்திகதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக இறந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.