எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட 11 பேர் விடுதலை !

நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியமை, ஆயுத வர்த்தகம் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரிக்கப்பட்ட பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான ‘கனேமுல்ல சஞ்சீவ’ அல்லது ‘ மாலிங்கமுவே சஞ்ச்ஜீவ ‘ எனப்படும் சஞ்சீவ சமரரத்ன உட்பட 11 சந்தேகநபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் புத்திக ஶ்ரீராகல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போதே இந்த 11 பேரையும் விடுதலை செய்வதாக நீதிவான் அறிவித்தார். தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினால் கடந்த யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் புதைக்கப்பட்டிருந்த கிளைமோர் குண்டுகள், ரீ 56 ரக துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை தோண்டியெடுத்து கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கடத்தி இரகசியமான முறையில் பாதாள உலகக்குழு உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தமை மற்றும் கொள்வனவு செய்தமை, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை கொலை செய்ய சதி செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இதுவரை முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, குறித்த 11 பேருக்கும் எதிராக வழக்கு தொடர்வதற்கு போதுமான சாட்சிகள் இல்லையென சட்ட மா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் ஏனைய நான்கு சந்தேகநபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கொழும்பு குற்ற தடுப்புப் பிரிவினர் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த நீதவான் இந்த தீர்ப்பை அறிவித்தார்.

வத்தளை பகுதியில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் புலிகள் இயக்க உறுப்பினரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய சோதனைகளை முன்னெடுத்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கனேமுல்ல சஞ்சீவ உள்ளிட்ட 15 பேரை கைது செய்திருந்தனர்.

கனேமுல்லை சஞ்சீவ கைது செய்யப்படும் போது வேறு ஒரு வழக்குக்காக விளக்கமறியலில் இருந்தார். அவர் எம்.ஏ. சுமந்திரனை கொலைச் செய்ய சதித் திட்டம் தீட்டிய சந்தேகத்திலும் ஆயுத கடத்தல் தொடர்பிலும் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் விளக்கமரியலில் இருந்து தமது பொறுப்பில் எடுத்து, வெள்ளவத்தை பொலிஸ் நிலைய சிறைக் கூண்டில் தடுத்து வைத்து 2019 ஆம் ஆண்டு முதல் விசாரித்திருந்தனர்.

சந்தேகநபர்கள் கடந்த இரண்டரை வருடங்களுக்கும் அதிக காலம் தடுத்து வைப்பு உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட நிலையிலேயே, இந்த விவகாரத்தில் கைது செய்யப்ப்ட்ட 15 பேரில் 11 பேர் விடுவிக்கப்ப்ட்டுள்ளனர்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *