யாழ் மாநகர காவல் படையின் சீருடையின் நிற சர்ச்சை காரணமாக கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை யாழ் காவல்துறையினரால் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் யாழ் மாநரக முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் கைது செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில் “பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தாம் கைது செய்யப்படுவதற்கு ஊடகங்களும் முகநுால் போராளிகளுமே காரணம்.” என யாழ் மாநரக முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.
ஊடக நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவதற்கான எந்தவொரு தவறையும் நான் செய்யவில்லை. யாழ் மாநரக சபையை தூய்மையாக பேணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள யாழ் மாநகர காவல் படையின் செயற்பாடுகள் திட்டமிட்டவாறு முன்னெடுக்கப்படும். யாழ் மாநகர காவல் படையின் ஆடையின் நிறம் தொடர்பாக காவல்துறையினரால் தடைகள் ஏற்படுத்தப்படும் பட்சத்தில் அது தொடர்பில் ஆராயப்படும்.
யாழ் மாநகர காவல் படையின் ஆடை தொடர்பாக ஊடகங்களிலும் முகநுால்களிலும் தவறாக சித்தரிக்கப்பட்டமையினாலேயே தாம் கைது செய்யப்பட்டதாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட அவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.