“இலங்கை தமிழர்களையும் – தமிழ்நாட்டுத் தமிழர்களையும் அரசியல்வாதிகள் மோத விடுகின்றனர். இதனை ஒரு போதும் ஏற்க முடியாது” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை ஆட்சியாளர்களால் தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் – சிங்களப் புத்தாண்டு பிறந்துள்ளது. நாட்டில் தற்போது வறுமை சூழ்ந்து கொண்டிருக்கின்றது. பொருட்கள் விலையேற்றம், தேங்காய் எண்ணெய் மற்றும் பருப்பில் கலப்படம் என உண்ணும் உணவுகளிலேயே நச்சுப் பதார்த்தங்கள் கலக்கப்பட்ட நிலை காணப்படுகின்றது.
அரசால் புத்தாண்டுக்காக வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவுகூட புத்தாண்டு தினத்தில் அந்த மக்களுக்குக் கிடைக்காத துர்ப்பாக்கிய நிலை காணப்பட்டது.
திட்டமிடாத வகையில் திடீரென அரசு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவைத் தமது அரசியல் நோக்கத்துக்காக வழங்கப்பட்டமையால் மக்கள் இரவிரவாக அரச அலுவலகங்களில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. புத்தாண்டு பிறந்துள்ள நிலையில் வடபகுதி மீனவர்கள் அதிலும் குறிப்பாக யாழ். மாவட்ட மீனவர்கள் தமது வாழ்வாதாரத் தொழிலை எண்ணி கலக்கமடைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்திய மீனவர்களை யாழ். கடல் எல்லைப் பகுதிகளில் மீன்பிடிக்க அனுமதிப்பது தொடர்பில் வெளியிட்ட கருத்து அத்தொழிலை வாழ்வாதாரமாகக் கொண்டு வாழும் மக்களுக்குப் பேரிடியாக மாறியுள்ளது.
இலங்கைத் தமிழர்களும் தமிழ்நாட்டுத் தமிழர்களும் ஒருதாய் பிள்ளைகளாகச் செயற்பட்டு வரும் நிலையில் அரசியல்வாதிகள் அவர்களை மோத விடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.
ஆகவே, இலங்கை அரசானது மீனவர்கள் பிரச்சினையில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுத்து இரு நாட்டு மீனவ மக்களை மோத விட்டு வேடிக்கை பார்ப்பதை முதலில் நிறுத்த வேண்டும்- என்றார்.