“சீனா தனக்கான அரசியல் தளம் ஒன்றை இலங்கையில் உருவாக்க முனைகிறது.” – ஜே.வி.பி குற்றச்சாட்டு !

“சீனா வியாபார நாடாக மாத்திரம் இலங்கையைப் பார்க்காது தமக்குத் தேவையான மையமாக  இலங்கையை கணித்துள்ள காரணத்தால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர். ” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சீனாவின் பொருளாதார ஆக்கிரமிப்பு இன்று இலங்கையின் அரசியலைத் தீர்மானிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அதேநேரம் அவர்கள் வெறுமனே வியாபார நாடாக மாத்திரம் இலங்கையைப் பார்க்காது தமக்குத் தேவையான மையமாக கணித்துள்ள காரணத்தால் அவர்களுக்கு ஏற்ற அரசியல் தளம் ஒன்றை உருவாக்க நினைக்கின்றனர்.

இலங்கை பெற்றுள்ள கடன் தொகையை மீளச் செலுத்த முடியாது.கடன் வாங்கிய நாடுகளிடம் மண்டியிடும் நிலைமை உருவாகியுள்ளது. நாளுக்கு நாள் நாடு பலவீனப்பட்டுக்கொண்டே செல்கின்றது.

சீனாவின் பொருளாதாரத் தலையீடு காரணமாக நாட்டின் வளங்களை இழக்கும் அளவுக்கு நாம் வந்துவிட்டோம் என்ற விமர்சனத்தை ஒரு தடவை சீனத் தூதுவர் எம்மைச் சந்தித்த வேளையில் முன்வைத்தேன். அதற்கு அவர் என்னிடம் கூறியது ஒன்றுதான், ‘இலங்கையில் முன்னெடுக்கும் எந்தவொரு வேலைத்திட்டமும் நாம் முன்வைத்த திட்டங்கள் அல்ல. அனைத்துமே இலங்கை அரசு எம்மிடம் முன்வைத்த திட்டங்களே. அதற்கு உதவிகளை மட்டுமே நாம் செய்கின்றோம்’ என்றார்.

எனவே, சீனாவை மாத்திரம் திட்டுவது அர்த்தமற்றதாகும். அவர்களுக்கு இடமளித்த ஆட்சியாளர்களே பாரிய தவறைச் செய்துள்ளனர். அவர்களை மாற்ற வேண்டியதே அவசியம் எனக் கருதுகின்றேன். இலங்கையைப் பொறுத்தவரை இந்தியாவின் சந்தை, உற்பத்தி என்பன இலங்கைக்கு வாய்ப்புகளை உருவாக்கும். இந்தியாவுடன் எமது பொருளாதார உறவு பலமடைந்தால் நாடு பாதுகாப்பாகவும் அதேபோல் ஆசியாவின் முக்கிய மையமாகவும் நாம் மாறலாம்.

இதேவேளை, மூவின மக்களும் ஒன்றிணைந்து, நாட்டைச் சரியான பாதையில் கொண்டு செல்லும் அரசியல் தலைமையை உருவாக்கிக்கொண்டு நாடாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டியதையே முதலில் சிந்திக்க வேண்டும்.

தனித் தலைவர்களால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. சகலரும் இணைந்தால் மட்டுமே நாடாக மீள முடியும்.” என தெரிவித்துள்ளார்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *