“ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். ஒரு நாட்டின் தலைவரிடமிருந்து இதனை எதிர்பார்க்கவில்லை.” நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று(16.04.2021) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “கொழும்பு துறைமுக நகரம் தொடர்பில் நான் தெரிவித்த கருத்துகளுக்காக ஜனாதிபதி எனக்கு அச்சுறுத்தல் விடுத்தார். ஜனாதிபதி தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தினார். நாடு ஒன்றின் தலைவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை.
இதன்போது ஜனாதிபதியின் பாணியிலேயே நான் பதிலளித்தேன். தற்போது எனது மற்றும் எனது குடும்பத்தவர்களின் உயிர்களின் பாதுகாப்பு குறித்து நான் அச்சமடைந்துள்ளேன்.“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் அரசாங்கத்திற்குள் இருந்துகொண்டு ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மிரட்டியதாக அவர் கூறியதைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ஷ மேலதிக பாதுகாப்பை கோரியுள்ளார்.
இது தொடர்பாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச பொலிஸ்மா அதிபரிடம் இது தொடர்பான கடிதத்தை கையளித்துள்ளார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலம் உட்பட அரசாங்கத்தின் சில திட்டங்கள் மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக குரல் கொடுத்ததால் தான் ஜனாதிபதி மிரட்டியதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
கொழும்பு துறைமுக நகர சட்டமூலம் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்டது, இது போர்ட் சிட்டிக்குள் ஒரு தனி சீன காலனி அமைக்க வழிவகுக்கும் எனவும் அரசாங்க தரப்பு உறுப்பினராக இதுபோன்ற ஊழல்களையோ அல்லது நாட்டின் சில பகுதிகளோ விற்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தமை நோக்கத்தக்கது.