“நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரையே ஜனாதிபதி அச்சுறுத்தும்போது சாதாரண பொதுமக்களின் நிலை என்ன .?” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்தமைக்காக ஜனாதிபதி தகாத வார்த்தைகளால் என்னை மிரட்டினார். என்ற குற்றச்சாட்டை பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச முன்வைத்திருந்தார். இது பற்றி பேசிய போதே திஸ்ஸநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறிய போது ,
மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்த கருத்து தொடர்பாக தனது கருத்தை தெரிவிக்க ஜனாதிபதிக்கு உரிமை உண்டு. ஆனால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது சாதாரண மக்களின் கருத்திற்கு பதிலளிக்க பல்வேறு வழிகள் உள்ளன.
ஜனாதிபதி ஊடக பிரிவு அல்லது அரசாங்க தகவல் திணைக்களம் ஊடாக அந்த அறிக்கைக்கு பதிலளித்திருக்க முடியும். மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல்களால் நாட்டை ஆட்சி செய்ய ஜனாதிபதியும் அரசாங்கமும் மேற்கொண்ட முயற்சிகள் தோற்கடிக்கப்பட வேண்டும்” என கூறினார்.
நாடு குறித்து முடிவுகளை எடுக்கும்போது மக்களின் ஒப்புதல் பெறப்பட வேண்டும் எனவே தான் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு தொடர்பான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையால் அங்கீகரிக்க வேண்டும் என கோரி உயர் நீதிமன்றத்தை நாடியுள்ளதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டார்.
நீண்ட விடுமுறை காலத்தில் நாடாளுமன்றில் வரைபை சமர்ப்பித்து குறித்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்திற்குச் செல்வதற்கான உரிமையை கூட அரசாங்கம் பறித்திருக்கிறது என்றும் திஸ்ஸ நாயக்க குற்றம் சாட்டினார்.