Sunday, January 23, 2022

இனப்பிரச்சினைத் தீர்வுக்கான தீர்வுத்திட்டம் மக்கள் தீர்ப்புக்கு விடப்படுமா? – ஏகாந்தி

Wanni Child2009ஆம் ஆண்டு இலங்கையைப் பொறுத்தமட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ஆண்டாக காணப்படுமென அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். தற்போதைய வடமாகாண யுத்தம் மனிதாபிமான நெருக்கடியை மிகப் பாரியளவு தோற்றுவித்துள்ள நிலையில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பான கருத்துக்களும் சர்வதேச மட்டத்தில் நெருக்கடியைக் கொடுத்துவருவதை அவதானிக்கலாம்.

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடானது, இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்ததாகுமென்று தெரிவித்துள்ளார். இலங்கைப் பிரச்சினை குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் விரிவாகக் கலந்துரையாடியதாகக் கூறியுள்ள ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கையில் சிவிலியன்கள் பாதிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ஐ. நா. வும் இந்தியாவும் கூட்டாக செயற்பட்டு வருவதாகவும் “ரைம்ஸ் ஒப் இந்தியா” பத்திரிகைக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்திருந்தார்.

“பாரிய மனிதாபிமானப் பிரச்சினை எழுவதைத் தவிர்க்க வேண்டுமானால், உடனடியாக மோதல்கள் நிறுத்தப்பட வேண்டும். ஐ. நா. வும் ஏனைய அமைப்புகளும் இதனைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தரப்பினரைக் கேட்டுக் கொள்கின்றன” என்று தெரிவித்த பான் கீ மூன், இறுதிக் கட்டமாக, அரசியல் தீர்வொன்று எட்டப்படுமென நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு ஒரு நாள் விஜயமொன்றை மேற்கொண்ட ஐ. நா. செயலாளர் நாயகம், இலங்கை விடயம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சருடன் விரிவாகக் கலந்துரையாடியுள்ளார். எவ்வாறாயினும் அரசியல் தீர்வு என்ற விடயம் இலங்கை அரசுக்கு மிகவும் கட்டாயப்பாடான நிலையென்பதை மறுப்பதற்கில்லை. அதேநேரம், இதுகாலவரை இது விடயமாக காட்டிவந்த அசமந்தப் போக்கை இனியும் காட்ட முடியாது என்பதே இலங்கை அரசும் உணர்ந்திருப்பதை அரசு சார்பில் முன்வைக்கப்படக் கூடிய சில கருத்துக்களிலிருந்து அவதானிக்க முடிகின்றது. இந்நிலையில் –

இனப்பிரச்சினைக்கான தீர்வாக மாகாண சபை முறைமையை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு முன்வைக்க வில்லையென்றும், சகல தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முழுமையான அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வு வரைவினையே தயாரித்து வருவதாகவும் குழுவின் தலைவர் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸவிதாரண அண்மையில் தெரிவித்திருந்தார். இந்தத் தீர்வுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்க வேண்டுமென்றும் அமைச்சர் கருத்து வெளியிட்டிருந்தார்.

தீர்வு வரைவின் இறுதிப்பகுதி தொடர்பாக தற்போது கட்சிப் பிரதிநிதிகளுக்கிடையில் பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்கான இறுதிக்கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறிய அமைச்சர் திஸ்ஸவிதாரண “தீர்வுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு முன்பு 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது. ஆனால் மாகாண சபை நிர்வாக முறைமையை நாம் முன்மொழியப் போவதில்லை. முற்றிலும் புதியதொரு அதிகாரப் பகிர்வினை அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் தயாரித்து வருகிறோம்” என்றும் தெரிவித்திருந்தார்.

குழுவின் கூட்டங்களை நிறைவு செய்ததும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகக் கூறிய அமைச்சர், அதன் பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட அரசியல் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாகக் கூறினார். இந்தக் கட்சிகளின் கருத்துகளையும் உள்ளடக்கி தீர்வு வரைவினை ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழு 100 இற்கும் மேற்பட்ட தடவை கூடி மாகாண சபை முறைமையை இனப்பிரச்சினைக்கான தீர்வாக முன்வைக்க உள்ளதாகவும் அதிகாரப் பகிர்வு எதுவும் கிடையாதென்றும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இவை முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்று அமைச்சர் உறுதியாகத் தெரிவித்தார். இங்கு அமைச்சரின் கருத்துக்களைத் தொகுத்துப் பார்க்கும்போது, 13வது அரசியல் அமைப்புத் திருத்தம் பூரணமாக நடைமுறைப்படுத்துவதை அவர் ஏற்றுக் கொண்டுள்ள போதிலும்கூட,  எதிர்நோக்கப்படும் நெருக்கடிகள் காரணமாக இதுபோன்றதொரு கருத்தை முன்வைத்திருக்கலாம் எனவும் எண்ணத் தோன்றுகின்றது.

13வது அரசியல் அமைப்புத் திருத்தத்துக்கு மேலாக வேறொன்றை வழங்கக் கூடாதென்று சில அரசியல் கட்சிகள் நெருக்கடிகளைக் கொடுத்து வருகின்றன. மறுபுறமாக பொலிஸ் அதிகாரம், காணிப் பகிர்வு அதிகாரம் போன்வற்றை வழங்கப்போவதில்லை என அரசாங்கத் தரப்பில் சில பொறுப்பு வாய்ந்த அமைச்சர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் திஸ்ஸவிதாரண குழுவினரால் முன்வைக்கப்படவுள்ள இறுதித் தீர்வுத் திட்டம் எத்தகையதாக இருக்கும் என்ற வினா பொதுவாக எழுந்துள்ளது.

மறுபுறமாக தற்போதைய யுத்த வெற்றிகளின் பின்னணியில் பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறக்கூடிய நிகழ்தகவு இருப்பதையும் காணமுடிகின்றது. இது தொடர்பாக ‘ராவய” பத்திரிகை எதிர்வுகூறுகையில் ஏப்ரல் மாதம் 20ஆம் திகதிக்கும் 30ஆம் திகதிக்குமிடையில் பாராளுமன்றம்  கலைக்கப்படலாமென கூறியுள்ளது. இன்னும் சில ஊடகங்களின் கருத்துப்படி பாராளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெறும்போது இலங்கையின் இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வொன்றுக்காக வேண்டி மக்கள் தீர்ப்பும் பெறப்படுமென கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும்,  இந்த நிலையைப் பொறுத்தமட்டில் அரசியல் தீர்வுத் திட்டம் என்ன என்பது மக்கள் மத்தியிலுள்ள பொதுவான கேள்வியாகும். இந்த சூழ்நிலையைப் பொறுத்தமட்டில் இன்னும் இன்னும் காலத்தை வீணடிக்காமல் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான தெளிவானதும்,  நிலையானதுமான கருத்தொன்றை முன்வைக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

 

12 Comments

 • Nathan
  Nathan

  சர்வதேச மூலதனத்தின் சதியை முடியடிப்போம்

  சுயநிர்ணயப் போராட்டம் என்பது தடம் புரண்டு நேரிடையாகவே சர்வதேசத்திற்கிடையில் சதுரங்க ஆட்டம் நடைபெறுகின்றது. கண்ணீர் விட்டோம் வளர்த்தோம் என்று நாம் இன்று நெஞ்சில் அடிப்பதன் மூலம் எவ்வித பயனும் அடையப் போவதில்லை. இன்றைய நிலையில் எதிர்காலத்தில் என்ன செய்ய வேண்டும் என பார்ப்பதே முக்கியமானதாக அமையும்.
  வன்னியில் மக்கள் சிறிய பிரதேசத்தில் அகப்பட்டிருக்கின்றார்கள் இந்த மக்களை பாதுகாப்பதில் எவரும் கவனம் செலுத்துவதாக தெரிவில்லை. ஆனால் எவ்வாறு புலிகளை சரணடைய வைக்கலாம் அல்லது முற்றாக அழிக்கலாம் என்பதில் சர்வதேசம் தமக்கிடையே கருத்து ஒற்றுமை கொண்டு செயற்படுகின்றது.
  இவற்றை அறிந்து கொண்ட சிறிலங்கா பாசீச அரசு புலிகளை அழிக்கின்றோம் எனக் கூறிக் கொண்டு தமிழ் மக்களை படுகொலை செய்கின்றது. புலிகளின் பகுதிகள் அனைத்துமே ஏற்றுக் கொள்ளப்பட்ட தாக்குதல் இலக்கு என ஸ்கை செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியில் ராஜபட்சே கூறியிருந்தார். இதனால் அங்கிருக்கும் மக்களை பாதுகாப்பதில் இனவாத அரசு சிறிதும் அக்கறை கொள்ளவில்லை என்பதைக் காட்டுகின்றது. (புலியெதிர்ப்பாளர்கள் இதனை உண்ணிப்பாக கவனிக்க தவறுகின்றனர் ) இதற்கு புலிகள் அந்த மக்களை தடுத்து வைத்திருப்பதாக அரசு கூறுகின்றது.

  புலிகளின் பிரதேசங்களில் இருக்கின்ற மக்களை பல்வேறு வகையாக பிரிக்கலாம்
  புலிகளின் தலைமையில் குடும்பத்தினர்
  மாவீரர் குடும்பத்தினர்
  தேசபக்தர்கள், அதாவது புலியை தமது விடுதலை அமைப்பாக ஏற்று கொண்ட விசுவாசிகள்.
  அங்கவீனமான போராளிகள்
  இவர்களில் குறிப்பிட்ட பகுதியினர் புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட மக்களாக இருக்கவும் முடியும். இப்படி பலதரப்பட்ட மக்கள் இருக்கின்றனர். இவ்வாற வேளையில் சர்தேசியவாத நிலையில் இருந்துதான் முடிவெடுக்க வேண்டும். எவ்வாறெனில் உள்நாட்டு சர்வதேச எதிரிகளின் சூழ்ச்சி இவற்றை கவனத்தில் கொள்ள வேண்டும்.

  ஆக புலிகளினால் தடுத்து வைக்கப்பட்டவர்களை விட மற்றவர்கள் எவ்வாறு அரச கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரமுடியும்.
  இங்கு அரசபடை வடித்தெடுத்து கொலை செய்வார்கள்
  அரசபடைகளுடன் சேர்ந்தியங்கும் குழுக்களின் பழிவாங்கலுக்கு உள்ளாகுவர்.
  வரும் மக்கள் திறந்தவெளிச் சிறைச்சாலையில் தான் வாழ வேண்டும். ஏனெனில் அரச கட்டுப் பாட்டில் உள்ள பிரதேசங்கள் அத்தனையும் திறந்த வெளிச் சிறைச்சாலைக்கு ஒப்பாகத் தான் இருக்கின்றது. அங்கு வாழ்கின்ற மக்கள் சுதந்திரமாக வாழவில்லை. அப்பிரதேசத்தில் தந்திரோபாயமாக தமது வாழ்க்கையை தப்பி பாதுகாத்து வாழ்கின்றனர். இலங்கையில் ஒரு சிங்கள குடி எவ்வித (பொருளாதார வசதி இல்லாது இருக்கலாம்) எவ்வித உயிராபத்தும் இல்லாது வாழ முடிகின்றது போல தமிழ் மக்கள் வாழ முடிகின்றதா?
  இவர்களின் எதிரிகள் யார் எனப் பார்ப்பது நல்லது
  -சிறிலங்கா அரசபடைகளும்
  -அவர்களுடன் சேர்ந்தியங்கும் குழுக்கள்
  -விடுதலைப் புலிகளின் பழிவாங்கல்
  இந்த மூன்றுவிதமான இல்லாதொழிப்பிற்கு மத்தியில் வாழ வேண்டியிருக்கின்றது.

  இவ்வாறான நிலையில் பழிவாங்கல் என்றில்லாமல் மக்கள் தாமே தமது நிலையை தீர்மானித்துக் கொள்ளக் கூடிய வகையில் யுத்த நிறுத்தம் அமைந்து கொள்ள வேண்டும். கைதுகள், காணாமல்போதல், சித்திரவதை மற்றும் பழிவாங்கல்கள் அனைத்துப் பிரிவினராலும் நிறுத்தப்பட வேண்டும். இவையே யுத்தநிறுத்தத்தின் ஒரு அம்சமாக இருக்க வேண்டும்.
  புலிகள் தற்பொழுது இருக்கும் நிலைப்பரப்பில் அவர்களை வேண்டுமென்றால் முடக்கி விட முடியும். அதே வேளை அரசசார்பு குழுக்களின் நடமாட்டம், அரச படைகளின் கட்டுப் பாடு என்பது 1970களுக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். இவைகள் யுத்த நிறுத்தத்தின் பின்னரான பேச்சுவார்த்தையில் ஒரு அம்சமாக கொள்ளப்பட வேண்டும்.

  யுத்தத்தை நிறுத்துவது
  நிவாரணப் பொருட்களை அனுப்புவது
  அரசு தனது சுற்றிவளைத்துள்ள பகுதிகளில் பாதுகாப்பினை மேற்கொள்ளலாம் ஆனால் புலிகளின் பிரதேசத்தினுள் பிரவேசம் செய்யக் கூடாது.
  இதே போல புலிகளும் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது.
  புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வெளியேறும் மக்களை வெளியே புலிகள் அனுமதிக்க வேண்டும்

  அனைத்துப் பகுதியினரும் பேச்சுவார்த்தை மேசைக்கு வரவேண்டும்-
  அரசியல் தீர்வை முன்வைத்தல் வேண்டும் இவைகள்
  தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம்
  தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை இருக்கு என்பதை ஏற்றுக் கொள்ளல் அத்துடன் முஸ்லீம், மலையக மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் வேண்டும்
  வட- கிழக்கு இணைப்பு
  அனைத்து மக்களுக்கும் குடியுரிமை அளிக்கப்பட வேண்டும்.

  புலிகள்: மக்கள் தாம் விரும்பியவாறு தமது போராட்டத்தை தொடர அனுமதித்தல் வேண்டும்
  ஏகபிரதிநிதித்துவக் கோட்பாட்டை கைவிடல் வேண்டும்.
  மேற்கூறியவை உடனடியாக அமுல்படுத்த வேண்டியவையாகும்.

  இதன் மூலமே புலியெதிர்ப்பாளர்கள் மக்களின் உரிமையை சோற்றுக்கும் சலுகைக்கும் நிகரானது என அரசுடன் சேர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர். இன்று வன்னி மக்களின் அவலத்திற்கு புலிகளை மாத்திரம் குற்றம் சுமத்திக் கொண்டு மக்களின் உரிமைகளை நசுக்குவதில் எவருக்கும் குறையாது செயற்படுகின்றனர்.
  யுத்த நிறுத்தம்
  நிவாரணம்
  படைகள் தத்தம் இடங்களில் நிலைகொள்வது
  மக்களை விரும்பும் இடத்தில் குடியிருக்க அனுமதிப்பது
  ஏகதலைமை கோட்பாட்டை புலிகள் கைவிடல்

  Reply
 • அருட்செல்வன்
  அருட்செல்வன்

  யுத்தம் நிறுத்தப்பட்டு உடனடியாக அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டுமென வியாழக்கிழமை சபையில் அரசாங்கத்தை வலியுறுத்திய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரான ஹசன் அலி எம்.பி., ஏற்புடைய அரசியல் தீர்வொன்றை முன்வைத்தால் தமிழ் மக்கள் கூட விடுதலைப்புலிகளை ஒதுக்கி வைக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

  பாராளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே ஹசன் அலி இவ்வாறு கூறினார்.

  அவர் அங்கு மேலும் பேசுகையில்;

  “இராணுவ வெற்றிகளை மட்டும் கருத்திற் கொண்டு மக்களின் பிரச்சினைகளை புறந்தள்ளி விடக்கூடாது. இந்த வெற்றிகளை கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களும் உணர்ந்து அனுபவிக்க வேண்டுமெனில் அங்குள்ள மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும்.

  ஆனால், கிழக்கில் யுத்தம் முடிவடைந்த பின்னரும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

  கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்களின் விருப்புக்கு மாறாக அரசாங்கம் பெற்றுக்கொண்ட வெற்றியின் பின்னரே இந்த நிலை அங்கு ஏற்பட்டுள்ளது.

  இதேநேரம், இன்று ஒரேயொரு இனம்தான் போராடுகிறது, வெற்றியும் பெறுகிறது என்றே பிரஸ்தாபிக்கப்படுகிறது. தெற்கிலுள்ள மக்களும் இப்படியே கருதுகின்றனர். தெற்கில் இனவாதம் ஏற்பட்டுள்ளது. பாடசாலைகளுக்குச் செல்லும்போது முஸ்லிம்களின் கலாசாரத்தின் பிரகாரமான தொப்பியைக் கூட சில அதிபர்கள் கழற்றுமாறு கூறுகின்றனர்.

  கிழக்கு மாகாண முஸ்லிம்கள் காணி பங்கீட்டிலும் இன்று பிரச்சினைகளைச் சந்தித்துக்கொண்டிருக்கின்றனர். இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.

  யுத்தம் இன்று அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது மட்டுமன்றி பொருளாதார மயப்படுத்தப்பட்டுள்ளது. யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் சிறுபான்மையின சமூகங்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் அரசியல் தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும்.

  எனவே, யுத்தம் நிறுத்தப்பட்டு உடனடியாக அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்பட வேண்டும். அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படுமானால் தமிழ் மக்கள் கூட விடுதலைப்புலிகளை ஒதுக்கி வைக்கக்கூடிய நிலையொன்று தற்போது ஏற்பட்டுள்ளது’ என்றார்.

  Reply
 • பராக்கிரமன்
  பராக்கிரமன்

  இராணுவ ரீதியாக வெற்றிகொள்ள முடியாது என்பதை விடுதலைப் புலிகள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அரசியல் தீர்வு காண்பதற்கு முன்வரவேண்டும். நோர்வேயின் சர்வதேச விவகாரங்களுக்கான அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர் அங்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை நேற்று முன்தினம் சந்தித்துப் பேசிய பின் ஊடகவியலாளர்களிடம் மேற்கண்டவாறு தெரிவித்தார். இராணுவ ரீதியாக வெற்றிகொள்ள முடியாது என்பதை விடுதலைப்புலிகள் புரிந்துகொள்ள வேண்டும். எனவே ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு அமைதியான முறையில் அரசியல் தீர்வு காண்பதற்கு முன்வரவேண்டும். போரை நிறுத்துவதற்கு புலிகள் ஆயுதங்களைக் கீழே வைத்துவிட்டு கொழும்புடன் இணங்கிப் போகவேண்டும் என்பதையே நோர்வே, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா இணைந்த இணையத் தலைமை நாடுகள் கடந்த வெளியிட்ட கூட்டறிக்கையிலும் வெளிப்படுத்தியிருந்தது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

  Reply
 • Mr .Cool
  Mr .Cool

  முல்லைத்தீவில் கடந்த சில தினங்களாக மிகப் பயங்கரமான போர் மூண்டிருப்பதாகத் தெரிவித்த ஐ.தே.க. எம்.பி. லக்ஷ்மன் செனிவிரட்ண, பயங்கரவாதத்தை 90 வீதம் அழித்துவிட்டதாகக் கூறும் அரசு தமிழ் மக்களுக்காக என்ன தீர்வை முன்வைத்துள்ளதென்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற அவசர கால சட்டநீடிப்பு விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கேள்வி எழுப்பினார். முல்லைத்தீவில் கடந்த சில தினங்களாக மிகப் பயங்கரமான போர் மூண்டுள்ளதாக அறிகின்றோம். விளக்கு அணையும் போது பிரகாசமாக எரியும். அதுபோல் தான் இதுவும் என்று நினைக்கின்றேன். பயங்கரவாதத்தை 90 வீதம் அழித்துவிட்டதாக கூறும் அரசு, தமிழ் மக்களுக்கு என்ன தீர்வுத் திட்டத்தை முன்வைத்துள்ளது? தமிழ் மக்களுக்கான தீர்வை அரசு வழங்குவதற்கு நாம் ஒத்துழைப்பு வழங்கத் தயார். வடக்கில் யுத்தம் முடிவுறும் நிலையில் தெற்கில் இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளை அரசு நிறுத்த வேண்டும். இதுதான் ஐ.தே.க.வின் கோரிக்கை.’

  Reply
 • பராக்கிரமன்
  பராக்கிரமன்

  இலங்கையில் உள்ள அனைத்து தமிழ் அமைப்புகளையும் உள்ளடக்கி அமைதியான வகையில் அரசியல் தீர்வு காண்பதற்காக புதிய நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். . அந்த புதிய அரசியல் தீர்வு என்பது கடந்த 1987 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கொண்டதாக அமைய வேண்டும். அந்நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளை இணைத்து ஒன்றிணைந்த அந்த பகுதிகள் தமிழர்களின் பாரம்பரிய பகுதிகளாக அறிவிக்கப்பட்டு அரசியல் ரீதியான தீர்வு ஏற்படுத்த வேண்டும். – இந்திய பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா

  Reply
 • அருட்செல்வன்
  அருட்செல்வன்

  *அரசமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும்.

  * மாகாண மட்டத்தில் மேல் சபைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

  அனைத்துக் கட்சிகளின் தெரிவுக்குழு செய்துள்ள சிபாரிசுகளில் மேற்கண்ட இரண்டும் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாக நம்பிக்கையாகத் தெரியவந்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் இந்தக்குழு கூடி இறுதிநகல் வரவை தயாரித்துள்ளது. அந்த வரை விலேயே மேற்கண்ட இரண்டு சிபாரிசுகளும் அடங்கி உள்ளதாக தெரிவுக்குழு வட்டாரங்கள் கூறின.அரசாங்கம் அமைத்துள்ள அனைத்துக் கட்சித் தெரிவுக்குழு 104 ஆவது தடவையாக கூடி இறுதி நகல் வரைவை தயாரித்துள்ளதாக அறியப்படுகிறது.

  இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக 95 வீதமான விடயங்களில் தெரிவுக்குழுவில் பங்குகொண்ட கட்சிகளிடையே இணக்கம் காணப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

  இந்த இறுதி நகல் வரைவு இந்த மாத இறுதியில் ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. அதற்கு முன்னர் அந்த வரைவு சகல அரசியல் கட்சிகளுக்கும் அனுப்பப்படும் என்று மேலும் தெரிவிக்கப் பட்டது.

  Reply
 • palli
  palli

  அருட்செல்வன் இது ஒரு கண்துடைப்பு. இது எமக்கு வினையாகதான் முடியுமே தவிர சாதகமாக எப்போதும் நிறைவேறாது.

  Reply
 • அருட்செல்வன்
  அருட்செல்வன்

  பல்லி உங்கள் வாயில் தேனைத் தடவ வேண்டும்.

  இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் முகமாகவும் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிவாரணம் வழங்கும் முகமாகவுமே திஸ்ஸவிதாரண தலைமையில் சர்வகட்சி குழு கூட்டப்பட்டு இதுவரை 104 கூட்டங்களை நடத்திவிட்டது.

  தற்போது கிடைக்கும் தகவல்களின்படி இக்குழு இலங்கையின் அரசியலமைப்பை மாற்றியமைப்பதில் தீவிரம்காட்டி வருவதாக தெரியவருகின்றது. ஒரு புதிய அரசியலமைப்பு மாற்றமொன்று ஏற்படுத்தப்படுமிடத்து இலங்கையில் ஜனாதிபதி ஆட்சிமுறைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு மீண்டும் வெஸ்மினிஸ்டர் ஆட்சிமுறை கொண்டுவரப்படுமென சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

  தற்போது இரண்டாவது குடியரசியலமைப்பின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையில் ஜனாதிபதிக்கு இரண்டு தடவைகளே பதவி வகிக்கலாம்.
  ஆனால்,வெஸ்மினிஸ்டர் முறை அறிமுகப்படுத்தப்படுமிடத்து இந்த எல்லை விதிக்கப்பட மாட்டாது .

  இதன் உட்கருத்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~வின் இரண்டாவது பதவிக் காலம் முடிந்த பின்பும் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதற்கான ஒரு எண்ணமாக இருக்கலாம் அல்லவா? எனவே, இவ்வளவு காலமே பொறுத்துவிட்டோம். இன்னும் கொஞ்ச நாளும் பொறுத்துப் பார்ப்போம்.

  ஒன்று மட்டும் உண்மை. என்றும் நாம் இலவு காத்த கிளிகள்.

  Reply
 • அருட்செல்வன்
  அருட்செல்வன்

  பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டால் அதற்கடுத்தபடியாக ஜனநாயகம் நிலைநாட்டப்பட வேண்டும். வடக்கை விடுவித்தபிறகு அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப் படுவதற்கு நிறைவேற்று ஜனாதிபதி முறைமை வழிவகுக்குமா என்பது சிந்திக்க வேண்டிய விடயமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

  Reply
 • mutugan
  mutugan

  அரசியல் தீர்வுத் திட்டங்கள் பற்றியெல்லாம் மக்கள் சிந்திக்கின்ற அளவுக்கு அவர்களை பழக்கப்படுத்தி பேசப் பண்ணி தயார் படுத்தியா வைத்திருக்கிறார்கள். தமிழ் ரிவிக்களில் நல்ல நாள் பெருநாட்களுக்கு சினிமாக்காரர் மட்டும் வந்து கருத்து சொல்லுவது மாதிரி இங்கே அரசியலும் ஏகபோகமாகத்தானே இருக்கிறது?

  Reply
 • palli
  palli

  முருகன் இப்படி சொல்லலாமா??
  இருப்பினும் அதுதான் எமது மக்களின் இன்றய நிலை.

  Reply
 • அருட்செல்வன்
  அருட்செல்வன்

  நாட்டின் பிரதான பிரச்சினையான இனநெருக்கடித் தீர்வு முயற்சிகள் தொடர்பில் அனைத்துக் கட்சிபிரதிநிதிகள் குழு 13 ஆவது அரசியல் திருத்தத்திற்கு மேலாகச்சென்று கலந்துரையாடியுள்ளதாகவும் அடுத்த சில அமர்வுகளின் பின்னர் இறுதித்தீர்மானம் முன்வைக்கப்படுமென்று அரசியல் கட்சிவட்டாரங்கள் மூலம் தெரியவருகின்றது.

  அதேநேரம், அரசாங்கம் 13 ஆவது அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று தீர்வை ஒருபோதும் முன்வைக்காதென தெரிவித்துள்ளதனால் அதில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை கட்சிகளுக்கிடையில் பல்வேறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றது.

  இது குறித்து மேலக மக்கள் முன்னணியின் உபதலைவர் ந. குமரகுருபரன் கருத்து தெரிவிக்கையில்; நாட்டின் முக்கிய பிரச்சினைக்கு தீர்வு காணும் மூலமாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட அனைத்துக்கட்சி பிரதி நிதிகள் குழு 13 ஆவது அரசியல் திருத்தத்துக்கு அப்பால் சென்று விவாதித்துள்ளது.

  இந்நிலையில், அடுத்த சில அமர்வுகளில் அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இறுதித் தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது. இந்நிலையில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் தீர்வு முன்வைக்கப்போவதில்லையென அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.

  அதேவேளை, அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழு இடைக்கால இரகசிய ஆவணமொன்றை அதாவது நடைபெற்ற விவாதத்தின் அரைவாசிப் பகுதியை உறுப்பினர்களுக்கு வழங்கியுள்ளது.

  இதில் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஒற்றையாட்சியை வலியுறுத்துகின்ற போதும் ஏனைய கட்சிகள் அதிகாரங்கள் தொடர்பில் மாற்று நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்றன.

  இறுதித்தீர்மானம் எவ்வாறு அமையுமென்று தெரியாதுள்ளது. இதில் சிறுபான்மையினர் ஏமாற்றப்பட்டுள்ளார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க முடியுமென தெரிவித்தார்.

  இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ்

  இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உயர் தலைவர்கள் ஆர்.யோகராஜன் கருத்து தெரிவிக்கையில்; அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு 13 ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று விவாதித்துள்ளது! இந்நிலையில் இதற்கு மேல் சென்று தீர்வை அரசு முன்வைக்காது என்று தெரிவிக்கப்படுவதற்கு தேர்தல் பிரசாரமே காரணமாகும்.

  இறுதித்தீர்வை முன்வைக்குமாறு இந்தியா உட்பட உலக நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்கின்றன. இந்நிலையில் அரசாங்கம் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவின் தீர்மானத்தை அமுல் படுத்தும் என்றார்.

  மலையக மக்கள் முன்னணி அடுத்த சில அமர்வுகளில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு இறுதித்தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளது. இந்நிலையில், அரசாங்கம் 13 ஆவது திருத்தத்திற்கு மேல் சென்று தீர்வை முன்வைக்காதென தெரிவித்துள்ளதன் அடிப்படையில் இறுதித்தீர்வு குறித்து சந்தேகம் எழுந்துள்ளதாக மலையகமக்கள் முன்னணியின் முக்கிய பிரதிநிதியொருவர் தெரிவித்தார்.

  அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் குழுவின் 105 ஆவது அமர்வு எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

  Reply