“பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலமான விசாரணைகள் சிறுபான்மையினரை இலக்குவைக்கக் கூடாது .” என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு வருடங்கள் நினைவுகூரப்படுவதையிட்டு வெளியிட்டுள்ள ருவிற்றர் பதிவுகளிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பதிவில், “இலங்கையில் மூன்று தேவாலயங்கள் மற்றும் மூன்று நட்சத்திர விடுதிகள் மீதான தாக்குதல்களில் 250 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதன்போது உயிரிழந்தவர்களை நினைவுகூர்வதோடு, காயமடைந்தவர்கள் மற்றும் உறவுகளை இழந்தவர்களுடன் நாமும் கரம் கோர்க்கின்றோம்.
அத்துடன், உயிரிழந்தவர்களின் நினைவுகளை நாம் மதிக்க வேண்டும் மற்றும் எந்தவொரு சமூகத்தின்மீதும் பாகுபாடு காட்ட முற்படும் செயற்பாடுகளுக்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.
இதேவேளை, இந்தத் தாக்குதல்களின் பின்னரான நீதியான விசாரணைகள் ஊடாக குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு இலங்கை அதிகாரிகளுக்கு உள்ளது. அந்த விசாரணைகள் சர்வதேச நியாயப்பாடுகளுக்கு மற்றும் தரத்திற்கு ஏற்றவாறு இருக்க வேண்டும்.
குறிப்பாக, சிறுபான்மையினரைக் குறிவைப்பதற்கும் பயங்கரவாதத்தைத் தடுக்கும் போர்வையில் குற்றச்சாட்டுகள் இன்றி யாரையும் தன்னிச்சையாக பல மாதங்கள் தடுத்துவைப்பதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் அரசாங்கம் பயன்படுத்தக்கூடாது.
இதேவேளை, கடுமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறு பரிசிலனை செய்வதுடன், அதனை இரத்துச் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.