ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் தனக்கு “குட் மோர்னிங்” சொல்லவில்லை என ஆங்கில ஆசிரியை தடியினால் அடித்ததால் , மாணவனின் கண் பாதிப்படைந்துள்ளது.
கடந்த 18ஆம் திகதி நடைபெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கணவர் பிரிந்து சென்ற நிலையில் இரு பிள்ளைகளுடன் ஊர்காவற்றுறையில் வசிக்கும் பெண் தனது பிள்ளையை ஊர்காவற்றுறை பகுதியில் உள்ள பாடசாலையில் சேர்ந்து , அங்குள்ள மாணவர் விடுதியிலும் (ஹொஸ்டல்) சேர்த்துள்ளார்.
படிப்பில் கெட்டிக்காரனான மாணவன் விடுதியில் தங்கி தனது கல்வியை தொடர்ந்து வந்துள்ளான். தரம் 09 கல்வி கற்கும் குறித்த மாணவனே வகுப்பு தலைவரும் (மொனிட்டர்) ஆவான்.
கடந்த 18 ஆம் திகதி வகுப்பிற்கு ஆங்கில ஆசிரியை வந்த போது மாணவன் எழுந்து “குட் மோர்னிங் மிஸ்” என கூறி விட்டு அமர்ந்துள்ளான். அதனை அவதானிக்காத ஆசிரியை தான் வகுப்பு வரும் போது எழுந்து குட் மோர்னிங் சொல்லவில்லை என கூறி தடியினால் மாணவனை அடித்துள்ளார்.
அதன் போது தடி கண்ணில் பட்டுள்ளது. அதனால் வேதனையில் மாணவன் அழுத்த போது தான் கற்பிக்கும் போது, அழுது தொந்தரவு செய்ய வேண்டாம் என மிரட்டியுள்ளார்.
அவரது பாடம் முடிந்த பின்னர் வகுப்பு மாணவர்கள் தமது வகுப்பாசிரியரிடம், மாணவனை ஆசிரியை அடித்து கண்ணில் தடி பட்டு அழுது கொண்டு இருக்கிறான் என கூறியுள்ளனர். வகுப்பாசிரியர் மாணவனை அழைத்து சென்று தண்ணீரினால் கண்களை கழுவி விட்டுள்ளார்.
இருந்த போதிலும் கண் வலி மாணவனுக்கு குறையவில்லை. பாடசாலை முடிந்து விடுதிக்கு சென்ற பின்னரும் மாணவன் வலியினால் துடித்து அழுத்துள்ளான்.அது தொடர்பில் சக மாணவர்கள் விடுதி பொறுப்பாளரும் , பாடசாலை அதிபருமான பாதிரியாரிடம் கூறியுள்ளனர்.
அவர் மாணவனை அழைத்து அருகில் உள்ள ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெறுமாறும், அங்கு வைத்தியர்கள் கேட்டால் விளையாடும் போது கண்ணில் தடி பட்டு விட்டதாக கூறுமாறும், கூறி சக மாணவனுடன் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வைத்தியசாலையில் கண்ணுக்குள் இருந்து சிறு தடி துண்டினை வைத்தியர்கள் எடுத்துள்ளனர். வைத்தியர் கேட்ட போது, விளையாடும் போது தடி பட்டதாகவே கூறியுள்ளனர்.
இது தொடர்பில் அறிந்த மாணவனின் தாயார் மறுநாள் பாடசாலைக்கு சென்றுள்ளார். பாடசாலையில் மகனை சந்தித்து அது தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டு பாடசாலை அதிபரை சந்திக்க காத்திருந்துள்ளார்.
பாடசாலை அதிபர் அறைக்கு அருகில் பல மணிநேரம் காத்திருந்த போது அவ்வழியே சென்ற ஆசிரியர்கள் விசாரித்து விட்டு சென்றார்களே தவிர யாரும் அதிபரிடம் கூட்டி செல்லவில்லை.
மதியம் 1.30 மணியளவில் இரண்டு ஆண் ஆசிரியர்கள் அதிபர் அறைக்கு பக்கத்தில் உள்ள அறைக்குள் தாயாரை அழைத்து சமாதானம் பேசியுள்ளனர். அத்துடன் மகனை வேறு பாடசாலையில் அனுமதிக்க மாட்டீர்கள். என்ன நடந்தாலும் இங்கே தான் கல்வி கற்கவேண்டும் என மிரட்டும் தொனியிலும் கதைத்துள்ளனர்.
அதற்கு தாயார் தனது பிள்ளைக்கு ஆசிரியை அடித்தது தொடர்பில் ஏன் எனக்கு அறிவிக்கவில்லை? பிள்ளை வைத்தியசாலைக்கு சென்று சிகிச்சை பெற்று இருக்கிறான். அது தொடர்பில் கூட எனக்கு அறிவிக்கவில்லை. இது தொடர்பில் நான் விடுதி பொறுப்பாளரும், அதிபருமான பாதிரியாரை சந்தித்து கேட்டு விட்டே செல்வேன் என கூறியுள்ளார். ஆசிரியர்கள் இருங்கள் அதிபரை அழைத்து வருகின்றோம் என போனவர்கள் , அதிபரை அழைத்து வரவே இல்லை .
பாடசாலை முடிவடைந்து மாணவர்கள் ஆசிரியர்கள் அனைவரும் வெளியேறிய பின்னர் 2.30 மணியளவில பாதிரியார் தாயாரை சந்தித்துள்ளார்.
தான் ஆசிரியைக்கு எதிராக நடவடிக்கை எடுத்து உள்ளதாகவும், ஆசிரியை தொடர்பில் உரிய தரப்புக்களும் அறிவித்து விட்டதாகவும் , இனி அவ்வாறு நடக்காது என தாயாருக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டு மாணவனை விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
தாயார் சென்றதும், விடுதியில் வைத்து,சக மாணவர்கள் முன்னால் சகட்டு மேனிக்குள் மாணவனை திட்டி அடித்துள்ளார்.
அதனால் மாணவனின் உடல் முழுக்க தழும்பு வரும் வரையில் அடித்துள்ளார். அத்துடன் மாணவன் மறுநாள் பாடசாலைக்கு தாயார் வந்து கதைத்து விட்டு சென்ற ஆசிரியர்களிடம் மன்னிப்பு கோருமாறும் கூறியுள்ளார். மறுநாள் மாணவன் ஆசிரியர்களிடம் மன்னிப்பும் கோரியுள்ளார்.
தற்போது மாணவன் அடி காயங்களுடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட வாக்குமூலம் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு மேலதிக விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது.-