தொடர்ந்து உரையாற்றிய அவர்,
நமது நாடு ஒரு சுந்தரத் தீவு. நமது நாடு இந்து சமமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த முத்து. நமது நாடு உலகுக்கு ஆன்மீக ஒளியைப் பரப்பிய நான்கு மதங்களும் தளைத் தோங்கும் நாடு. நமது நாடு மூப்பு, பிணி, சாக்காடு கண்டு தனது இல்லற வாழ்வில் அழகிய இளம் மனைவியையும் துறந்து தனக்கு ராஜபோகம் தரக்கூடிய அரச சுகபோகங்கள் அனைத்தையும் துறந்து உலகுக்கு ஞான ஒளியினை தன் பரி நிர்வாணம் மூலம் ஏற்படுத்திய கௌதம புத்தரின் ஆன்மீக ஒளியின் பெருமையினை பின்பற்றும் நாடும் கூட.
மூப்பு, பிணி, சாக்காடு கண்டு முத்தி கண்ட கௌதம புத்தருக்கு எதிரி என்று எவருமில்லை. இருப்பவரும் வாழ்பவரும் மனுக்குலத்தவரே. இந்த மண்ணில் வாழ்வது இன, மத, மொழி பேதங்களற்ற ஒரே மனுக்குலமே என்று போதி மர நிழலில் இருந்து பெற்ற ஞானம் மூலம் அறியத் தந்த கௌதம புத்தரை விசுவாசிக்கும் நாட்டில், அந்த விசுவாசம் உண்மையாக மாறி மாறி நாட்டை ஆட்சி செய்த அரசுத் தலைவர்களுக்கு உண்மையாக இருக்குமானால், இந்த நாட்டில் அரசியல் பழிவாங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விவாதம் ஒன்று ஏன் தேவை என்பதுதான் இன்று என் முன் எழுந்துள்ள பிரதான கேள்வியாகும்.
நம் அரசின் தலைவர்கள் தாம் உதட்டளவில் பேசும் பௌத்த தர்மம், தேசாபிமானம் என்பன தம் உள்ளத்திலிருந்து வெளிவராததன் காரணமாகவே இந்த நாட்டின் உயரிய சபையில் இன்று இந்த விவாதம் நடைபெறுகிறது. இதையிட்டு கௌதம புத்தரின் போதனைகளை மதிக்கும் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் வெட்கமடைவதா, தேவையடைவதா, துக்கமடைவதா, துயரமடைவதா இல்லை கௌதம புத்தனைப் போல் என் மனைவி பிள்ளைகளை விட்டுத் துறவறம் செல்வதா என்று பல்வேறு சிந்தனைகள் என் மனதைக் குழப்புகின்றது. வேதனைப்படுத்துகின்றது.
ஆட்சி மாறும் போது அமைச்சர்கள் மாற்றம் பெறுவார்கள், அமைச்சின் செயலாளர்கள் மாற்றம் பெறுவார்கள், அரச திணைக்கள, கூட்டுத்தாபன நியதிச் சபைகள் உட்பட அரச இயந்திரம் முற்றிலும் ஆட்சிக்கு வந்த ஆட்சியாளருக்குச் சாதகமாக மாறும் கடந்த அரசாங்க காலத்தில் உயர் பதவி பெற்றவர்கள் ஏன் அகில இலங்கைச் சேவை ஆளணியினர் கூட பொலிஸ் சேவை இப்படி பல பதவி நிலையில் இருப்பவர்கள் பந்தாடப்படுவார்கள்.
இவை ஆட்சி மாற்றங்கள் நடைபெற்ற போது பெரும்பான்மை இன மக்களுக்கிடையே, பௌத்த சிங்க மக்களுக்கிடையே ஏற்படும் அரசியல் பழிவாங்கல்களினதும் அவற்றுக்கான நிவாரணம் வழங்குவது என்பதும் ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் எனும் வகையில் ஓரிரு உதாரணங்களாகும்.
தென்னாபிரிக்காவின் தேச பிதாவான நெல்சன் மண்டேலா அவர்களை ஏகாதிப்பத்திய அரசு 26 வருடங்கள் சிறையில் வைத்து 26 வது வருடத்தில் விடுதலை செய்தது. இங்கு 26 வருடங்களுக்கு மேலாக விசாரணைகளின்றி வழக்குத் தாக்கலின்றி வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் எத்தனை அரசியல் கைதிகள் சிறையில் வாடுகின்றனர்.
அரச உயர் பதவி நியமனங்களில் தமிழர்கள் முற்றாகப் புறக்கணிக்கப்படுகிறார்கள். அண்மைய இலங்கை நிருவாக சேவைப் பரிட்சைகளின் முடிவு இதற்குத் தகுந்த சான்றாகும். முட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் கடந்த முறை 69 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு பரீட்சாத்தி கூட தமிழ் பேசுபவர் இல்லை என்பதே ஒரு உதாரணமாகும். ஒரு பழிவாங்கலுமாகும்.
இந்த நாட்டில் இன்று தமிழ் பேசும் மக்கள் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பது இந்த அரசியல் பழிவாங்கலுக்கு நல்ல உதாரணமாகும்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை எடுத்துக் கொள்ளுங்கள். கடந்த 28 ஆண்டுகளாக அந்தப்பிரதேச செயலகம் தனியாக இயங்கிவந்தது. 40ஆயிரத்துக்கும்அதிகமான தமிழர்கள் வாழ்கின்றார்கள். 29 கிராம சேவகர் பிரிவுகளைக் கொண்டு இருக்கும் அந்தப்பிரதேச செயலகம் இன்று தரம் இறக்கப்பட்டதாக அறிகின்றோம். கடந்த கால ஆட்சியில் அது தரம் உயர்த்தப்பட்டிருக்க வேண்டும். அது தவிர்க்கப்பட்டிருக்கிறது, கல்முனை நகரில் அரசியல் செய்யும் அரசியல் வாதியான ஹரீஸ் எம்.பியின் நடவடிக்கைதான் இது. பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்பட வேண்டுமே தவிர தரம் இறக்கப்படக் கூடாது. இலங்கையின் வரலாற்றில் முதல் தடவையாக கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரம் இறக்கப்பட்டுள்ளது.
ஹரீஸ் பாராளுமன்ற உறுப்பினர், தான் சார்ந்த சமூகத்தின் மரணமானவர்களின் உடலங்கள் எரிக்கப்பட்டிருக்கும் போதே 20வது திருத்தத்துக்கு வாக்களித்து ஆதரவளித்து தன்னுடைய சமூகத்துக்கே துரோகம் செய்தவர். இன்னுமொரு சமூகத்துக்கு உதவி செய்வார் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இருந்தாலும் நாங்கள் கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக எதிர்காலத்தில் தமிழ் முஸ்லிம்கள் இன ஒற்றுமையாக வாழவேண்டுமென்று ஆசைப்படுகின்றோம்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் முஸ்லிம்கள் ஒற்றுமையாக வாழவேண்டும் என்று எங்களுடன் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், பெரும்பான்மை ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரத்தின் ஊடாக இந்த வேலையைச் செய்கின்றார்கள். எனக்கு ஒரு சந்தேகம் இருக்கிறது. 20வது திருத்தச் சட்டத்திற்கு வாக்களித்த இவர்கள் பிரதேச செயலகத்தினை தரம் இறக்குவதன் மூலம் எதிர்வரும் காலங்களில் கொண்டு வரப்படவிருக்கின்ற கொழும்பு துறைமுக நகர பிரேரணையிலும் அதரவைப் பெறுவதற்காக இப்படிச் செய்கின்றார்கள என்று நினைத்துப்பார்க்க வேண்டியதாகயிருக்கிறது.
அதற்கும் மேலாக வடக்கு கிழக்கில் தமிழ் மக்கள் தொல்பொருள் என்ற ரீதியில் பழிவாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அம்பாறை பொத்துவில்லிருந்து பருத்தித்துறை வரையில் பல ஏக்கர் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டு வருகின்றன.
கௌதம புத்தரின் பௌத்த சின்னங்கள் இருப்பதாகக் அடையாளம் காட்டி நீங்கள் அபகரிக்கின்றீர்கள். கடந்த காலங்களில் இந்து மன்னர்கள் வாழ்ந்த, ஆட்சி புரிந்த பொலநறுவை, அனுராதபுரம் போன்ற இடங்களில் இந்து சின்னங்கள் இன்னும் இருக்கின்றன. அங்கு நூறு ஏக்கர் காணியைக் கொடுத்து இந்து மத ஸ்தாபனம் அமைக்க உங்களால் இடம் தரமுடியுமா என்று கேட்க விரும்புகிறேன்.