இந்திய மீனவர்களுடன் இலங்கை மீனவர்கள் பேணிவரும் தொடர்புகள் காரணமாக வடபகுதியில் குறிப்பாக யாழ். மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று தீவரமடையக் கூடிய சாத்தியக்கூறுகள் அதிகம் என மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா எச்சரித்துள்ளார்.
யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்றுக் காலை இடம்பெற்ற கொரோனா தடுப்பு செயலணிக் கூட்டத்தின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
“யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள மீனவர்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நீங்கள் தயவு செய்து யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்களைப் பாதுகாப்பதற்காக தென்னிந்திய மீனவர்களோடு தொடர்புகளைப் பேணாதீர்கள்” என்றும் அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறு நீங்கள் தொடர்புகளைப் பேணிக் கொள்வதன் மூலம் யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமடையக் கூடிய ஆபத்து நிலை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் தற்பொழுது கொரோனா தொற்று நிலைமை மிகத் தீவிரமடைந்துள்ளது. அந்த வைரஸ் இங்கு பரவினால் தொற்று நிலைமை தீவிரமடையும்.
எனவே இந்த விடயம் தொடர்பில் அவதானமாகச் செயல்படுமாறும் கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.