Monday, June 21, 2021

“கட்சி, கொள்கை மாறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” – உறவினர்கள் வேண்டுகோள் !

“ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர் அணிகளாக இருந்தாலும் சரி கட்சி, கொள்கை மாறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும்.” என தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கல்முனை வடக்குப் பிரதேச செயலக விவகாரம் தொடர்பாக கடந்த வாரம்  தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் ஒன்றிணைந்து அமைச்சர் சமல் ராஜ பக்சவுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர். அதன் பிந்திய பெறுபேறுகளுக்கு அப்பால் இது ஒரு ஆரோக்கியமான அவசியமான ஒருங்கிணைந்த முன்னெடுப்பாகும் இதே போன்று தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இது காலத்தின் தேவையாகும். எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும்தமிழ் அரசியல் கைதிகளின் பெற்றோர்கள் குறிப்பிடுகையில்……

கொழும்பு புதிய மகசின் சிறைச்சாலையில் 40 பேரும் அனுராதபுரம் சிறைச்சாலையில் 27 பேரும் நாட்டில் உள்ள மேலும் பல்வேறு சிறைகளில் 12 பேரும் என மொத்தம் 79 தமிழ் அரசியல் கைதிகள் சிறைத்தடுப்பில் உள்ளார்கள். அவர்கள்  மத்தியில் வயோதிபர்கள், போரினால் அவயங்கள் பாதிக்கப்பட்டவர்கள், சிறுவர்களாக கைது செய்யப்பட்டவர்கள் என பல வகையினரும் அடங்குவர்.

25 முதற்கொண்டு 10 வருட காலமாக தொடர் சிறைத்தடுப்பை அனுபவித்துக்கொண்டிருக்கும் எம் பிள்ளைகள் நிச்சயமற்றதொரு வாழ்க்கைச்சூழலை எதிர்கொள்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடன் இருந்த பல அரசியல் கைதிகள் நோய் நொடிகாளாலும் சிறைக் கலவரங்களாலும் சிறைக்குள்ளேயே செத்து மடிந்து போயுள்ளனர்.
எம் பிள்ளைகள் இன்று வருவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்த 20 க்கும் மேற்பட்ட பெற்றோர் கடைசிவரை தங்கள் அன்புக்குரியவர்களின் முகத்தை கூட பார்க்க முடியாமல் இறுதி மூச்சை திறக்க நேரிட்டுள்ளது. போதுமான மருத்துவ வசதிகளோ ஊட்டச்சத்துள்ள போசனமோ இன்றி வரையறுக்கப்பட்ட குறுகியதொரு இடப்பரப்புக்குள் அரசியல் கைதிகளாக அவர்கள் இத்தனை ஆண்டுகளாக நரக வேதனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்களே என்பதை சற்று சிந்தித்து பாருங்கள்.

நெடுங்காலமாக குடும்ப உறவுகளிடம் இருந்து பிரித்து வைக்கப்பட்டுள்ளதால் உடல் உள ரீதியில் பாதிக்கப்பட்டு 90 வீதமானவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளார்கள். தொற்றா நோய்களான நீரிழிவு, இருதய நோய்,சிறுநீரக கோளாறு, ஆஸ்துமா, மூட்டு வியாதிகள் போன்றவற்றால் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருக்கும் எமது பிள்ளைகளுக்கு சீரான மருத்துவ பரிசோதனைகளோ தகுந்த மருத்துவ பராமரிப்போ இன்றி துன்பப்படுகிறார்கள். தவிர அவ்வப்போது தொற்று நோய்களும் அவர்களை ஆட்கொண்டு வருத்த வருகிறது. தொலைவெல்லை புலன்களற்ற சுற்று மதில் சுவர்களுக்குள்ளும் சிறைஅறைகளுக்குள்ளும் தசாப்பத காலமாக தடுத்தடைக்கப்பட்டுள்ள எம் பிள்ளைகளுக்கு கட்புலனும் செவிப்புலனும் வெகுவாக குன்றி வருகிறது. இத்தனைக்கும் மத்தியில் கொரோனா பரவலின் முதலாவது சுற்று அனைவரையும் தொற்றி துன்புறுத்தி விட்டது. அதன் பாதிப்பிலிருந்து மொத்தமாக மீள்வதற்குள் நாட்டில் மீண்டும் பாரிய அளவிலான கொரோனா தொற்று பரவல் ஏற்பட்டுள்ளது. சிறைக்குள் பொருத்தமான தொற்று நீக்கல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரியவில்லை. தடுப்பு ஊசிகளும் ஏற்றப்படவில்லை.

சிறைகளில் ஏற்பட்ட இட நெருக்கடியை குறைக்கும் முகமாக அரசாங்கத்தால் இரு வேறு தடவைகளில் ஆயிரக்கணக்கான கைதிகள் விசேட ஏற்பாட்டுக்களின் ஊடாக விடுவிக்கப்பட்டனர். எனினும் தமிழ் அரசியல் கைதிகள் எவருக்கும் அதில் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை. எனவே இத் தருணத்திலாவது ஆளும் கட்சியாக இருந்தாலும் சரி எதிர் அணிகளாக இருந்தாலும் சரி கட்சி, கொள்கை மாறுபாடுகளை கடந்து அரசியல் கைதிகள் தொடர்பில் அனைவரும் சிந்திக்க வேண்டும். அறிந்தோ அறியாமலோ பொது நோக்கொன்றின் நிமித்தம் சுய வாழ்வை அடமானம் வைத்து நாளாந்தம் சிறைகளுக்குள் சிதைந்து கொண்டிருக்கும் எமது பிள்ளைகளின் விடுதலைக்காக அனைத்து தமிழ் கட்சிகளின் மக்கள் பிரதிநிதிகளும் ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரியிடம் ஒரு பொதுப்பொறிமுறையை முன்வைத்து மனிதாபிமான அடிப்படையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என வினயமுடன் வேண்டுகோள் விடுக்கிறோம். என குறிப்பிட்டார்கள்

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *