“எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும்.பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணிவந்தால் இதனை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எங்களுக்கு இருக்கின்றது.” என இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்தார்.
நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் தொற்றாளர்களின் தொகையை கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிக்கையில்,
நாட்டில் கொவிட் தொற்றாளர்கள் கடந்த இரண்டு தினங்களில் 1500 முதல் 2500க்கும் அதிகமானவர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலைமையிலும் இதனை கட்டுப்படுத்தலாம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கின்றது. அதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். அதனால் பொது மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பேணிவந்தால் இதனை கட்டுப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் இன்னும் எங்களுக்கு இருக்கின்றது.
அத்துடன் எதிர்வரும் 4 வாரங்கள் மிகவும் தீர்மானமிக்கதாகும். அதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியில் செல்வதாக இருந்தால் ஒருவர் மாத்திரம் செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். அதேபோன்று இரண்டு முகக்கவசங்களை அணிந்துகொண்டு வெளியில் செல்லுமாறே நாங்கள் கேட்கின்றோம். இதுதான் புதிய சுகாதார வழிகாட்டலாகும். சனக்கூட்டம் இருக்கும் இடங்களுக்கு செல்வதை முடியுமானவரை தவிர்த்து கொள்ளவேண்டும். அதேபோன்று பீ.சீ.ஆர்.பரிசோதனை மேற்கொண்டவர்கள் அதன் பெறுபேறு கிடைக்கும்வரை யாரும் வெளியில் செல்லாமல் தனிமையிலேயே இருக்கவேண்டும்.
அவ்வாறு யாராவது பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டுள்ள ஒருவருடன் நெருங்கிப்பழகி இருந்தால், அவர் உடனடியாக தனது பொது சுகாதார அதிகாரிகளிடம் அதுதொடர்பில் முறையிட்டு, சுயதனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும்.
மேலும் வைத்தியசாலைகளின் எண்ணிக்கை, பி.சீ.ஆர். பரிசோதனைகள், ஒட்சிசன் போன்றவற்றை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருகின்று. அதனால் பொது மக்கள் இதுதொடர்பாக சிந்திக்காமல் தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருந்தால் எங்களுக்கு இந்த நோயை கட்டுப்படுத்த முடியாமல் போவதில்லை. தற்போது நாட்டில் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டு வருவது மேல்மாகாணத்தில், கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை மாவட்டங்கள் மற்றும் கண்டி, குருணாகல். மாத்தளை மாவட்டங்களாகும். தொற்றாளர்கள் அதிகம் கண்டுபிடிக்கப்படும் கிராம சேவகர் பிரிவுகளை முடக்குவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என்றார்.