கொரோனா விதிமுறைகளை மீறி முல்லைத்தீவில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு !

அகழ்வாராய்ச்சி நடைபெற்றுவரும் முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியில் கொரோனா விதிமுறைகளை மீறி முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் ஏற்பாட்டில் நூற்றுக்கணக்கான இராணுவத்தினரின் பிரசன்னத்துடன் பௌத்த பிக்குகள் இணைந்து தொல்லியல் திணைக்களத்தினரால் பிரித் ஓதும் பௌத்த வழிபாட்டு நிகழ்வு தற்போது இடம்பெற்றுவருகின்றது.

குருந்தாவ அசோக புராதன பௌத்த விகாரை சிதைவுகள் இருப்பதாக தெரிவித்து அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இன்று இரவிரவாக பூசைகள் இடம்பெற்று பௌத்த விகாரையை புனர்நிர்மாணம் செய்யும் வேலைகளை ஆரம்பிக்கும் நிகழ்வு நாளை காலை இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது. இந்த நிகழ்வுக்கு அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் தலைவர் ஜெகத் சுமதிபால தெற்கிலிருந்து வருகைதந்து கலந்துகொள்ளவுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

காவல்துறையினருக்கோ மாவட்ட நிர்வாக தரப்பினருக்கோ சுகாதார தரப்பினருக்கோ தெரியப்படுத்தப்படாமல் முற்றுமுழுதாக இராணுவத்தினரின் ஏற்பாட்டில் பெருமளவான பௌத்த பிக்குகளை ஒன்றிணைத்து குறித்த சமய நிகழ்வு தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் ஒன்றுகூடுவதற்கோ வழிபாடுகளை ஒன்றுகூடி மேற்கொள்வதற்க்கோ தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் அரச நிகழ்வுகளை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும் இரவோடு இரவாக சுகாதார தரப்பினரின் எந்தவித அனுமதிகள் எவையும் பெறப்படாது குறித்த பௌத்த அனுட்டான நிகழ்வு பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையக தலைமை படை அதிகாரி மற்றும் பௌத்த பிக்குகள் 29 பேர் , தொல்லியல் திணைக்களத்தினர் இணைந்து பெரும் எடுப்பில் தோரணங்கள் கட்டி , அலங்காரங்கள் பந்தல்கள் என வழிபாடுகள் இடம்பெற்றுவருகின்றது.

குருந்தூர்மலை அகழ்வாராய்ச்சிகள் தொடர்பில் வெளிப்படை தன்மை பேணப்படாது உள்ளூர் தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டு இராணுவத்தினரின் ஏற்பாட்டில் கடந்த நான்கு மாதங்களாக தொல்லியல் திணைக்களத்தால் அகழ்வாராய்ச்சிப்பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் திடுதிப்பென பெரும் எடுப்பில் பௌத்த வழிபாடுகள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை பலத்த சந்தேகத்தினை பிரதேச மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் கொரோனா நிலமை காரணமாக மக்கள் கூட்டங்களை தவிர்குமாறு அறிவித்துள்ள நிலையிலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் எதிர்வரும் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைக் கடைப்பிடிப்பதற்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் மக்கள் அரசியல்வாதிகள் என்று எவர் ஒன்றுகூடினாலும் அனைவரும் கூண்டோடு கைதுசெய்யப்படுவார்கள் என இராணுவத்தளபதியும் கொரோனா செயலணி தலைவருமான சவேந்திரசில்வா தெரிவித்துள்ள நிலையிலும் குருந்தூர் மலைக்கு சென்று முல்லைத்தீவு மாவட்ட படைத்தளபதி உள்ளிட்ட படை அதிகாரிகளுடன் 25ற்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் காவல்துறையினருக்கோ மாவட்ட அரசாங்க அதிபருக்கோ, பொதுசுகாதார பரிசோதகர்களுக்கோ அறிவிக்காத நிலையில் குருந்தூர் மலைக்கு சென்றுள்ளார்கள்.

அங்கு படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பௌத்த துறவிகளினால் பிரித் ஓதப்பட்டு வருவதுடன் நாளை தொடக்கம் புனர் நிர்மான பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

முஸ்லிம்கள் பெருநாளன்று பள்ளிவாசல்களுக்கு செல்லத்தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் தங்களது குடும்பத்தாருடன் தங்களது வீட்டிலேயே ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தால் அறிவித்துள்ள நிலையில் இது போன்றதான ஒரு காலத்தில் தடைசெய்யப்பட்ட   மதநடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரும் துணைபோவது குறிப்பிடத்தக்கது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *