இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே நீண்ட காலமாகவே மோதல்கள் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியாக காசாமுனை பகுதி உள்ளது. இந்த காசா முனை பகுதியை ஹமாஸ் என்ற போராளிகள் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த போராளிகள் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது.
இந்த காசாமுனை பகுதியில் இருந்து இஸ்ரேல் நாட்டின்மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் அவ்வப்போது ராக்கெட் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்துவது வழக்கம். ஹமாஸ் பயங்கரவாதிகளில் இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் இராணுவமும் எதிர்த்தாக்குதல் செய்து வருகிறது.
இதற்கிடையில், இஸ்ரேலின் ஜெருசலேமில் உள்ள ஷைக் ஜாரா மாவட்டத்தில் யூதர்கள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறும் நிலத்தில் வசித்து வந்த பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்ற இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துவந்தது.
இதற்கு கண்டனம் தெரிவித்து ஜெருசலேமில் உள்ள அல் அச்சா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் போலீசாருக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.
முதலில் பாலஸ்தீனர்கள் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மீது தாக்குதலை தொடங்கினர். அதன் பின்னர் பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர்.
பாதுகாப்பு படையினர் ரப்பர் குண்டுகளை பயன்படுத்தினர். பாலஸ்தீனர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் பலர் காயமடைந்தனர். அதேபோல், இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் பலர் காயமடைந்தனர். இந்த மோதலை தொடர்ந்து ஷைக் ஜாராவில் இருந்து பாலஸ்தீன குடும்பங்களை வெளியேற்றுவது தொடர்பாக நடைபெற்று வரும் வழக்கை சிறிது நாட்களுக்கு தள்ளிவைப்பதாக இஸ்ரேல் நீதித்துறை தெரிவித்துள்ளது.
வழக்கு தள்ளிவைக்கப்பட்டபோதும் மோதல் அரங்கேறி வருகிறது. இருதரப்பினருக்கும் இடையே கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் இந்த மோதல் மிகப்பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்று உலக நாடுகள் அச்சம் அடைந்துள்ளன.
இதன் ஒரு பகுதியாக பாலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினர் நேற்று ராக்கெட் தாக்குதல் நடத்தினர்.
முதலில் 7 ராக்கெட்டுகள் ஹமாஸ் பயங்கரவாதிகளால் ஏவப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் இஸ்ரேலை குறிவைத்து மொத்தம் 45 ராக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதில் பெரும்பாலான ராக்கெட்டுகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் விழுந்ததாக பாதுகாப்பு படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் தாக்குதலால் ஜெருசலேம் மற்றும் இஸ்ரேலின் பிற நகரங்களில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், ஹமாஸ் பயங்கரவாதிகளின் ராக்கெட் தாக்குதல் நடத்திய சில மணி நேரத்தில் அந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பாதுகாப்பு படை பதிலடி கொடுத்துள்ளது. காசா முனையில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி மற்றும் குழந்தைகள் உள்பட மொத்தம் 20 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் பதிலடி தாக்குதலால் ஜெருசலேம், ஹமாஸ் பகுதிகளில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.