“நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்து விட்டது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளமைக்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த ஊடக அறிக்கையில் இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,
“இந்த அரசாங்கம் தமிழர்களுடைய வரலாறுகளை அழிப்பதுடன் தமிழர்களுக்கு நினைவு கூறும் வாய்ப்பினை கூட இல்லாமல் செய்யும் செயற்பாட்டினை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவேந்தல் முற்றம் சேதப்படுத்தப்பட்டுள்ளமையானது இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கின்றது.
கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர், யாழ்.பல்கலைக்கழகத்திலும் இத்தகையதொரு சம்பவம் அரங்கேறியிருந்தது. ஆனால் அதனை பல்கலைக்கழக உபவேந்தரே மீண்டும் கட்டுவதற்கு உதவினார். இதேவேளை தமிழர்களின் உணர்வுகளை நினைவு சின்னங்களை இடித்து அழிப்பதன் ஊடாக இல்லாமல் செய்ய முடியாது. இவ்வாறு அழிக்கப்படும் ஒவ்வொரு நினைவுச் சின்னமும், தமிழர்களுடைய மனங்களில் ஒரு புதிய உணர்வை மேலும் வலுப்படுத்தும்.
தமிழர்களுக்கு எதிராக நிகழ்ந்த அநீதியை நாங்கள் ஒருபோதும் மறக்கமாட்டோம். ஆகவே தமிழர்களுடைய உணர்வுகளை அழிக்க, புதிய வழிகளையே இனி தேட வேண்டும். எங்களுடைய உணர்வுகளை எவராலும் அழிக்க முடியாது. இதேவேளை அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்ற தமிழ் பிரதிநிதிகளும் கூட இவ்விடயத்தில் கண்டனம் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும்.
மேலும் யுத்தத்தில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூருதல் மற்றும் நினைவு தூபிகளை இடிக்காமல் பாதுகாத்தல் ஆகியன தமிழ் பிரதிநிதிகளின் முழுப் பொறுப்பாகும். நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நிறைவடைந்து ஒரு வருடத்திற்குள்ளேயே தன்னுடைய இறுதி ஊர்வலத்தில் அரசாங்கம் பயணிக்க ஆரம்பித்து விட்டது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.