“பெரும்பான்மை பௌத்தவாதிகள் ஈழத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும் தருணத்தில் சீலம் எனும் சீனாவுக்கு உரிய நாடு ஒன்று இலங்கையில் உருவாகியுள்ளது.” என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று(20.05.2021) இடம்பெற்ற துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,
இலங்கையர் சீனாவிற்கு வரி கட்டும் நிலையும் உருவாகியுள்ளது. துறைமுக நகரத்திற்குள்ள நுழைய வேண்டும் என்றால் உங்களிடம் அதற்கான அனுமதிப் பத்திரம் கோரப்படும். இது இந்த சட்டமூலத்தில் இருக்கின்றது.
இதேவேளை இந்த ஆணைக்குழு எமது குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரத்தைப் பெறுகின்றது. எல்லைக் கட்டுப்பாட்டை ஆணைக்குழுக்கு கிடைக்கின்றது. இலங்கையைச் சேர்ந்தவர்கள் குறித்த நகரத்திற்குள் உள்நுழையலாம் ஆனால் வெளியில் வரும் போது வரி செலுத்த வேண்டும். இதுவும் சட்டமூலத்தில் இருக்கின்றது.
நீங்கள் ஈழத்தைப் பற்றி கதைத்துக் கொண்டிருக்க சீலம் இலங்கையில் உருவாகி வருகின்றது. இது சீனம். இது சீலம் உங்கள் நிலத்தை உங்கள் நீரை பரிசாக சீனாக்கு வழங்கியுள்ளீர்கள். ஆனால் இதற்கான பாதிப்புக்களை மிகவிரைவில் சந்திப்பீர்கள் என்றார்.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் கடந்த ஏப்ரல் மாதம் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிக்கப்பட்டது. குறித்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நேற்றும் இன்றும் நடைபெற்றிருந்த நிலையில், 89 மேலதிக வாக்குகளால் குறித்த சட்டமூலம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.