“தமிழ் மக்களுக்கு தனிநாட்டை வழங்குவதுதான் தேசப்பற்றாளர்களுடைய பிரச்சினை. வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்க ஆதரவளிப்பார்கள்.” – ராஜித சேனாரத்ன

“தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே இந்த தேசப்பற்றாளர்கள் எதிர்க்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் இவர்களுக்கு சிக்கல் இல்லை. ” என  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் .

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நேற்று (22.05.2021) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

தமிழ் ஈழத்திற்கும் நாடு பிளவடைவதற்கும் எதிரானவர்கள் என்று பாரியளவில் கூச்சலிட்டவர்கள் தான் இன்று கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். ஒரே நாடு ஒரே சட்டம் என்றல்லவா கூறினார்கள்? இன்று ஒரே நாடு ஒரே சட்டம் எங்கிருக்கிறது ? இந்த வலயத்திற்கு ஒரு நீதியும் எமது வலயத்திற்கு ஒரு நீதியுமே காணப்படுகிறது.

இதற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம் சமஷ்டி அதிகாரத்தை விட அதிகமானதாகும். இந்த வலயம் தனி இராச்சியமொன்றாகும். இது தனி ஈழமாகும். இதனை தனி ஈழமாகக் குறிப்பிடுவதற்கு தற்போது குறைவாகவுள்ள ஒரே காரணி அந்நாட்டு பொலிஸார் இந்த வலயத்தில் இல்லாதது மாத்திரமேயாகும்.

13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாடு பிளவடையும் என்று கூறினார்கள். 13 இற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வெட்கமின்றி துறைமுக நகர சட்ட மூலத்திற்கு ஆதரவளித்துள்ளனர். 13 ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் கூட , ஒற்றையாட்சிக்குள்ளேயே அதிகாரம் பகிரப்பட்டிருக்கும்.

தமிழ் மக்களுக்கு ஈழத்தை வழங்குவதை மாத்திரமே இந்த தேசப்பற்றாளர்கள் எதிர்க்கின்றனர். வெளிநாட்டவர்களுக்கு ஈழத்தை வழங்குவதில் இவர்களுக்கு சிக்கல் இல்லை. குறித்த சட்ட மூலத்திற்கு ஆதரவளித்த அனைவரும் போலியான தேசப்பற்றாளர்கள். தற்போதைய அரசாங்கத்திற்கு நாடாளுமன்றத்தில் மாத்திரமே மூன்றில் இரண்டு பெரும்பான்மை காணப்படுகிறது. நாம் தொடர்ந்தும் நாடாளுமன்றத்திற்கு வெளியிலும் இதற்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுப்போம்.

1977 இல் ஜே.ஆர்.ஜயவர்தன திரட்டியதைப் போன்று மக்கள் படையை இதற்கு எதிராக நாமும் திரட்டுவோம். அத்துடன் கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதன் மூலம் உயிர்களை காப்பாற்றுவது அரசாங்கத்தின் முன்னுரிமைக்குரிய விடயமில்லை மாறாக கொழும்பு துறைமுகநகர சட்டமூலமே அரசாங்கத்திற்கு முக்கியமான விடயம்.

பல நிறுவனங்கள் மற்றும் மருத்துவ அமைப்புகள் 14 நாள் முடக்கலை கோரியுள்ளன.எனினும் அரசாங்கம் தனது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுப்பதிலேயே கவனம் உள்ளது. மக்கள் தடுப்பூசியின் நன்மைகளை அனுபவிக்கவேண்டிய தருணம் இதுவென தெரிவித்துள்ள அவர் மக்களின் உயிர்களுக்கு முன்னுரிமை அளித்து நீண்ட நாள் முடக்கலை நடைமுறைப்படுத்தவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *