இலங்கை அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் முஸ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களையும், மஹ்மதுல்ல 54 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தமீம் இக்பால் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா 3 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 60 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொண்டார்.
பந்து வீச்சில் மொஹமட் ஹசன் 4 இலக்குகளையும், மொஹமட் ரஹ்மான் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.
அதன்படி, முதலாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.