புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டுப் பாதுகாப்பை நாடி வரும் சிவிலியன்களின் நலன்கருதி இன்று முதல் புதிய நடைமுறையை பாதுகாப்புப் படையினர் அமுல் படுத்தவுள்ளதாக இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க நேற்றுத் தெரிவித்தார்.
அரசாங்க கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு பாதுகாப்பை நாடி வரும் அப்பாவி மக்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்குவதற்கும் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசாங்கம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.
புலிகளின் பிடியிலிருந்து விடுபட்டு பாதுகாப்பை நாடி மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவதற்கு தயாராக உள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். விசுவமடு, சுதந்திரப் பிரதேசத்தை நோக்கி வந்த சிவிலியன்களை இலக்கு வைத்து புலிகளின் பெண் தற்கொலை குண்டுதாரி நேற்றுக்காலை மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு இடர் முகாமைத்துவம் மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்றது. இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, இடர் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் கலாநிதி ரஜீவ விஜேசிங்க கலந்துகொண்ட இந்த செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் :-
புலிகளின் பிடியில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை இராணுவ கட்டுப்பாட்டு பிரதேசத்தை நோக்கி வருமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் வேண்டுகோள் விடுத்திருந்தார். ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் அழைப்பை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் ஆயிரக்கணக்கில் வரத்தொடங்கினர். சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் கடந்த சில நாட்களுக்குள் வந்துள்ளனர். நேற்றும் ஐயாயிரம் பொது மக்கள் வருகை தந்துள்ளனர். யாழ்ப்பாணம் வடமராட்சியை நோக்கி படகுகள் மூலம் 2 ஆயிரம் பொதுமக்கள் வருகை தந்துள்ளனர் என்று யாழ். அரச அதிபர் தனக்கு தகவல் தந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பாதுகாப்பை நாடி எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் அவர்களுக்குத் தேவையான சகல நிவாரண நடவடிக்கைகளை செய்து கொடுக்க அரசாங்கம் தயாராக உள்ளது. இதில் எந்தவித மாற்றமும் இல்லை.
தற்பொழுது படுதோல்வியடைந்துள்ள புலிகள், இது போன்ற தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். சிவிலியன்களே புலிகளை பாதுகாத்துக் கொள்ளவுள்ள ஒரே ஒரு ஆயுதமாகும். எனவே பொதுமக்கள் பாதுகாப்பு நாடி வருவதையிட்டு விரக்தியடைந்த புலிகள் அப்பாவி பொதுமக்களை கொலை செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். தப்பிவரும் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி அவர்களின் வருகை கட்டுப்படுத்துவதே இதன் பிரதான நோக்கமாகும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
பாதுகாப்பை நாடி வந்த ஆயிரக்கணக்கான சிவிலியன்கள் வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள ஏழு நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம்.
இந்த மக்களை தங்கவைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் செய்து கொடுத்துள்ளோம். இந்த மக்களை தங்க வைக்கவென மேலும் 5 நலன்புரி நிலையங்களை அமைக்க வவுனியா அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பார்த்திபன்
ஏன் அரசாங்கம் விமான நிலையங்களில் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்புச் சமிக்கைகள் போல் நிறுவி அதனூடாக தப்பி வரும் மக்களை உள்வாங்கலாமே. அதன் மூலம் நரவேட்டைப் புலிகளை அடையாளம் கண்டு அவர்களிடமிருந்து அப்பாவி பொதுமக்களின் அழிவைத் தடுக்கலாமே !!