கிழக்கு மாகாணத்தில் பாரிய தேடுதல்களை மேற்கொள்ள படையினரும் பொலிஸாரும் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னியில் நடைபெற்றுவரும் பாரிய படை நடவடிக்கைகளிலிருந்து தப்பி விடுதலைப்புலிகள் கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவி வருவதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதையடுத்தே கிழக்கில் பாரிய தேடுதல்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருமான ரஞ்சித் குணசேகர தெரிவித்தார்.
வன்னியிலிருந்து கிழக்கு மாகாணத்திற்குள் ஊடுருவியுள்ள புலிகள் கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும் மறைந்திருப்பதாகவும் இதுவரை 60 இற்கும் மேற்பட்டோர் கிழக்கிற்குள் ஊடுருவியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஊடுருவியவர்களைக் கண்டுபிடிக்கவே மிக விரைவில் கிழக்கில் பாரிய தேடுதல்களை படையினரும் பொலிஸாரும் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, கிழக்கில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிர மடைந்துள்ளன. கிழக்கின் எல்லைப் புறப் பகுதிகளில் படையினரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் படைத்தரப்பு தெரிவிக்கின்றது. வீதிச் சோதனைகள், சுற்றிவளைப்புகள், தேடுதல்கள் அதிகரிக்கப்பட்டுமுள்ளது.