சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகிவிடுவார்கள் – ஜுனியர் விகடனுக்கு மங்கள சமரவீர அளித்த பேட்டி

mangala_saramaweera.jpgசர்வகட்சி பிரதிநிதிகள் குழுவென்பது சர்வதேச நெருக்குதலை குறிப்பாக இந்திய அழுத்தத்தை சமாளிப்பதற்கான கேலிக்கூத்து. இந்தியாவில் நடைமுறையிலிருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே இலங்கையின் சிக்கலைத் தீர்க்க தேவைப்படுகிறது என்று நம்புகிறேன் என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவரும் எம்.பி.யுமான மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஜுனியர் விகடனுக்கு அவர் அளித்த பேட்டியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். பேட்டி வருமாறு;

கேள்வி: மகிந்த ராஜபக்ஷ இலங்கையின் ஜனாதிபதியாவதற்கு நீங்கள் பெரிதும் உழைத்தீர்கள். ஆனால், இப்போது அவருடனான உறவை முறித்துக் கொண்டது ஏன்?

பதில்: கடந்த 2005 இல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றபோது ராஜபக்ஷவுக்கு தலைமைப் பிரசார ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட்டேன். அவர் ஜனாதிபதியானதும், எனக்கும் அமைச்சரவையில் பங்கு கொடுக்கப்பட்டது. 2006 இற்கு பிற்பகுதியில் தான் எங்கள் உறவில் கசப்பு ஏற்படத் தொடங்கியது. குறிப்பாகச் சொன்னால் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்தும், மூதூரில் தொண்டு நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொல்லப்பட்டது குறித்தும் நான் கவலை தெரிவித்த போதுதான் கசப்பு மேலிட்டது.

இத்தகைய கொடுமைகள் நடக்கும்போது அரசு செயலற்று இருந்தால், சர்வதேச அளவில் ஏற்படும் பழிச்சொல் பற்றி வெளியுறவுத் துறை அமைச்சர் என்ற முறையில் அவரிடம் எடுத்துரைத்தேன். நானும் ராஜபக்ஷவும் சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சியில் மூத்த அமைச்சர்களாக இருந்தபோது, இது போன்ற நிலைமைகளை சந்திரிகா எவ்வாறு கையாண்டார் என்பதை சுட்டிக் காட்டினேன்.

1995 இல் பொல்கோட வாவியில் பிணங்கள் மிதந்தபோது, சந்திரிகா அரசு குற்றவாளிகள் மீது உறுதியாக நடவடிக்கை எடுத்தது. கிருஷாந்தி குமாரசாமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கிலும் தொடர்புடைய இராணுவ அதிகாரிகள் மீதும் வழக்குத் தொடரப்பட்டு, முடிவில் அவர்களுக்கு தண்டனை கிடைத்தது. ஆனால், இப்போது குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க முயன்றால், அது இராணுவத்தின் மனஉறுதியைக் குலைத்துவிடும் என்று சாக்குச் சொல்லி எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எனவே, என் கவலைகளை எல்லாம் 13.12.2006 இல் ஜனாதிபதிக்கு ஒரு கடிதமாகக் கொடுத்தேன். ஆறு வாரம் கழித்து 27.1.2007 இல் நான் வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டேன். 09.02.2007 இல் அமைச்சரவையிலிருந்தே அகற்றப்பட்டேன். அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் போற்றி வளர்த்த ஜனநாயக நிறுவனங்களை ராஜபக்ஷவும் அவருடைய சகோதரர்களும் குட்டிச்சுவராக்கி விட்டார்கள். சிங்கள பௌத்த பேரினவாத கொடுங்கோலாட்சியை, பர்மிய அரசு மாதிரி நிறுவக் கனவுகாணும் தீவிரவாத சக்திகளான இவர்களின் அரசாங்கத்தில் அங்கம் வகிக்க என் மனச்சாட்சி இடம் கொடுக்கவில்லை.

கேள்வி: நீங்கள் உரிமைகளுக்காகப் பேசக்கூடியவராக அறியப்பட்டுள்ளீர்கள். உங்கள் நாட்டில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை எப்படிப் பார்க்கிறீர்கள்?

பதில்: ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை நிறுவுவதற்கு அடிப்படையாக இருந்த ஜனநாயகசோஷலிசக் கொள்கைகளை, உறுதியாக நம்புகிறவன் நான். ஆனால், ராஜபக்ஷ ஆட்சியில் மாற்றுக் கருத்துகளை சகித்துக்கொள்ளாத இருண்ட காலம் உருவாகி இருக்கிறது. தீவிரவாத சக்திகள், ஆளுங்கட்சியைக் கைப்பற்றி, அதன் மிதவாதக் கொள்கையை ஒழித்துக்கட்டிவிட்டு, இராணுவ சர்வாதிகாரம் போன்ற ஒன்றை உருவாக்கி வருகின்றன.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் அரசாங்கம் எம்முடைய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்புகளைத் திட்டமிட்டே நொருக்கி வருகிறது. பொலிஸ் துறையும், தேர்தல் ஆணையமும் அரசு நிர்வாகமும் சுயேச்சையாக இயங்குவதை உறுதி செய்யும் 17 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை அலட்சியமாக ஒதுக்கித் தள்ளிவிட்டனர். நீதித்துறை கடுமையான நெருக்குதலுக்கு ஆளாகியுள்ளது. தலைமை நீதிபதியையே ஆட்சியாளர்கள் தாக்கி வருகின்றனர். இனவாதமே அரசாங்கக் கொள்கையாகிவிட்டது.

கொழும்பில் உள்ள தமிழர்களை வெளியாளர்கள் என்று சொல்லி பொலிஸ் துறை சித்திரவதை செய்கிறது. இது ஒரு சிங்களபௌத்த நாடு. இங்கே சிறுபான்மையினரின் கோரிக்கைகளுக்கு இடமில்லை என்று ஜாதிக ஹெல உறுமய அமைச்சர் சம்பிக்கவும் இராணுவத் தளபதி பொன்சேகாவும் கூறிய கருத்தும் இதைத்தான் காட்டுகின்றன. அரசில் முக்கிய பங்கு வகிப்பவர்கள் இவ்வளவு மோசமான கருத்துகளை வெளியிட்டபோதும், யாரும் இதை மறுக்கவோ திருத்தவோ இல்லை.

கேள்வி: ராஜபக்ஷ அரசு போர் வெறிபிடித்து அலைவதாக உலக நாடுகள் சிலவும் கண்டனம் தெரிவித்திருக்கின்றனவே?

பதில்: இலங்கையின் மக்கள் தொகை வெறும் இரண்டு கோடிதான். ஆனால், இவர்களை ஆள்வதற்கு அனைத்து வசதிகளோடும் சலுகைகளோடும் 113 அமைச்சர்கள் உள்ளனர். இதனால், ஏற்படும் வீண்செலவும் ஊழலும் சேர்ந்து இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கின்றன. இதிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்புவதற்கான ஒரு கருவியாகத்தான் போர் பயன்படுத்தப்படுகிறது.

இலங்கை நிலைமை குறித்துக் கவலை தெரிவிக்கும் நட்பு நாடுகளைச் சேர்ந்த தூதர்களும், ஐ.நா. உயர் அதிகாரிகளும் கூட அரசு நடத்தும் ஊடகங்களால் புலி ஆதரவாளர்களாக தவறாகச் சித்திரித்துக் காட்டப்படுகின்றனர். இந்தப்போர், ஒரே நாட்டில் இரு இனக்குழுக்களுக்கு இடையே நடக்கும் மோதல். இதில் வெற்றிபெற்றவர்கள், தோல்வியுற்றவர்கள் என்று யாரும் இல்லை. பயங்கரவாதத்தைத் தோற்கடித்து, நீடித்த அமைதி மலரச் செய்வதற்கு இங்கே ஒரேயொரு வழி உண்டென்றால், அது தமிழ் மக்களின் உண்மையான மனக்குறைகளைப் போக்குவதுதான்.

ராஜபக்ஷ அரசாங்கத்தின் அப்பட்டமான பேரினவாதக் கொள்கைகள், மிதவாதத் தமிழர்களைக்கூட அதிதீவிர நிலைகளுக்குத் தள்ளிவிடுகின்றன. தற்போதைய போரில் பிரபாகரனையே ஒழித்துவிட்டாலும், சிங்களப் பேரினவாதப் போக்கால் மேலும் பல பிரபாகரன்கள் உருவாகிவிடுவார்கள் என்பது நிச்சயம். இதனால், இலங்கையின் துயரம் அடுத்த தலைமுறைக்கும் தொடரும்.

கேள்வி: அப்படியென்றால், ராஜபக்ஷ மனதிலுள்ள திட்டம் தான் என்ன?

பதில்: ஜனாதிபதி ராஜபக்ஷவிடம் தீர்வு ஏதும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவரே அனைத்துக் கட்சி ஆய்வுக் குழுவிடம் ஒற்றையாட்சி திட்டத்தைத் தாண்டிச் சிந்திக்க வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார். தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவு செய்வதில் அவருக்கு அக்கறை இல்லை.

கிழக்கு மாகாணத்தை விடுதலை செய்து, அங்கு ஜனநாயகத்தை நிறுவி இருப்பதாக உலகுக்குக் காட்டுகிறார்களல்லவா. அந்தக் கிழக்கு மாகாண சபைக்கு எவ்வித அதிகாரமும் தரப்படவில்லை. அப்பகுதியின் முதலமைச்சர் அரசுத் தரப்பின் ஆளாக இருந்தும் தனக்கு அதிகாரமே தரப்படவில்லை என்று கூறியிருக்கிறார். 13 ஆவது சட்டதிருத்தத்தின்படியான அதிகாரங்கள் கூட எந்த மாகாண சபைக்கும் தரப்படவில்லை.

அனைத்துக் கட்சி ஆய்வுக்குழு என்பது சர்வதேச நெருக்குதலையும் குறிப்பாக இந்திய நெருக்குதலையும் சமாளிப்பதற்காக நடத்தப்படும் கேலிக்கூத்து. இந்தியாவில் இருப்பது போன்ற கூட்டாட்சி அமைப்பே எம்முடைய சிக்கலைத் தீர்க்கத் தேவைப்படுவதாக நம்புகிறேன். 2000 த்தில் சந்திரிக்கா முன்வைத்த அரசமைப்புச் சட்ட வரைபை தமிழர் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியாகக் கருதலாம்.

கேள்வி: சிவராம், லசந்த விக்கிரமதுங்க உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் இலங்கையில் உண்மைகளை வெளியிட்டதற்காக கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். இதன் பின்னணியில் அரசின் கைங்கரியம் தான் இருக்கிறது என்று சொல்லப்படுகிறதே?

பதில்:அனுமதிப்பத்திரம் இல்லாத மோட்டார் பைக்குகளில் வந்தவர்கள் இராணுவப் பாணி தாக்குதலில் இறங்கி இரத்மலானை விமான நிலையம் அருகில் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் லசந்தவை கொன்றனர். ஒரு சராசரிக் குடிமகன் நம்பர் பிளேட் இல்லாமல் இப்பகுதியில் 10 மீற்றர் தூரத்தைக்கூட கடந்து செல்லமுடியாது. நம்மிடம் திட்டவட்டமான சான்று ஏதும் இல்லையென்றாலும் பாதுகாப்புத் துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்துள்ள நம்பத்தக்க தகவலின்படி இதுபோன்ற நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கென்றே பயிற்சி பெற்ற கொலைக்குழுக்கள் இலங்கையில் பல இருப்பதாக தெரிகிறது.

இந்தக்குழு பாதுகாப்புத் துறையில் உயர்ந்த பொறுப்பில் உள்ள ஒரு அதிகாரிக்கு மட்டும்தான் பதில் சொல்லவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜை இவர்கள்தான் கொன்றனர். கீத்நோயர் என்ற பத்திரிகையாளர் மீது நடைபெற்ற கொடுந்தாக்குதலும் லசந்த கொல்லப்பட்டதும் இவை எல்லாம் இப்படியொரு கொலைக்குழு இருப்பதையே காட்டுகின்றன.

கேள்வி: ராஜபக்ஷவின் ஆட்சி நடைமுறைக்கு எதிராக ஹிலாரி கிளின்டனை அணுகி புகார் தெரிவிக்க நீங்கள் திட்டமிட்டு இருப்பதாகச் செய்தி வந்துள்ளது. உங்களின் முயற்சிக்குப் பலன் கிடைக்குமா?

பதில்: பாதுகாப்புத் துறைச்செயலாளர் அமெரிக்கக் குடிமகன் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் பசில் ராஜபக்ஷவும் பச்சை அட்டை வைத்திருப்பவர்கள். இந்த மூவரின் குற்றச் செயல்கள் குறித்து ஓர் ஆவணத்தைத் தொகுத்துக் கொண்டிருந்தபோதுதான் லசந்த கொல்லப்பட்டார் என்பது எனக்குத் தெரியும் . இப்போது நானும் வேறு சிலரும் சேர்ந்து இந்த ஆவணத் தொகுப்பை முடித்துவிட முடியும் என நம்புகின்றோம். அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டனிடம்இந்தத் தொகுப்பை கையளிப்பதற்காக சந்திப்பு நேரம் ஒதுக்கித் தரும்படி கேட்போம்.

ஒபாமா அரசாங்கம் ஜனநாயகத்திலும் சட்டத்தின் ஆட்சியிலும் உறுதியான பற்றுக் கொண்டிருப்பதாக அறிவித்துள்ளது. இந்த நேரத்தில் ஆசியாவின் மிகத் தொன்மையான ஜனநாயகங்களில் ஒன்றாகிய இலங்கையில் ஜனநாயகப் பாரம்பரியத்தை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்கக் குடிமக்களான இவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் போகிறார்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறோம்.

இதையெல்லாம் செய்வதற்காக என்மீதும் அரசு தரப்பு பழிவாங்குதலையும் தாக்குதலையும் நடத்தக்கூடும். என் ஆதரவாளர்கள் மூலமாக எதையும் சமாளித்து கொடுங்கோலாட்சிக்கு முடிவு கட்டுவேன். இதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார் மங்கள சமரவீர.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *