உள்நாட்டு போரால் திணறும் சிரியாவில் நேற்று முன்தினம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. அரசு கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மட்டும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி பஷர் அல் ஆசாத் (வயது 55) மீண்டும் போட்டியிட்டார். அவருக்கு எதிராக முன்னாள் அமைச்சர் அப்துல்லா சலூம் அப்துல்லா, எதிர்க்கட்சியைச் சேர்ந்த மஹ்மூத் மெர்ஹி ஆகியோர் களமிறங்கினர்.
தேர்தல் முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில், தற்போதைய ஜனாதிபதி ஆசாத், 95.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக பாராளுமன்ற சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் 4வது முறையாக அவர் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். கடந்த தேர்தலில் ஆசாத் 88 சதவீதம் வாக்குகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியை ஆசாத் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், மேளதாளங்கள் முழங்க நடனமாடியும் கொண்டாடுகின்றனர். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, முன்னிலை நிலவரம் ஆசாத்துக்கு சாதகமாக இருந்ததால், பல்வேறு நகரங்களில் ஒன்றுகூடி வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். தெற்கு பகுதியில் உள்ள அலெப்போ, ஸ்வேதியா பகுதியிலும் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.