அரச அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக மேற்கொள்ளும் பிரசாரத்தை நிறுத்த வேண்டும் என்று ஐக்கிய தேசிய கட்சியின் உபதலைவரும் எம்.பி.யுமான கருஜயசூரியா வலியுறுத்தியுள்ளார். கம்பளை நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்யின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு வலியுறுத்திய இவர் மேலும் கூறியதாவது;
ஐக்கிய தேசியக்கட்சி நாட்டை துண்டாட ஒரு போதும் துணைபோகாது. இலங்கையின் 61 ஆவது சுதந்திர தினத்தை சுதந்திரமாகக் கொண்டாடும் வாய்ப்பு ஏற்பட்டது. இதற்குப் பின்னணியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் பெரும் தியாகங்களைப் புரிந்துள்ளனர். தேர்தல் ஜனநாயகத்தின் பிரதான அடையாளம். மக்கள் ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் வாக்களிப்பர். மக்களில் 51 சதவீதமானோர் ஆளும் கட்சிக்கு வாக்களிக்கும் போது அம்மக்களை மட்டுமன்றி, எஞ்சிய 49 சதவீத மக்களின் நலனிலும் அரசு அக்கறை செலுத்தவேண்டும்.
நாட்டில் இனிமேல் தேர்தல்கள் அவசியமில்லை. தலைவர்கள் தேவையில்லை என்று சில அரசியல்வாதிகள் அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தனர். ஜனநாயக நாட்டில் எவரும் கருத்துகளைத் தெரிவிக்க முடியும். எனினும் மேற்படி கருத்து வேதனையளிக்கின்றது. நாடு 99 சதவீதம் பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதியும் மீட்கப்படவேண்டும். நாடு யுத்தத்தில் பல உயிரிழப்புகளைக் கண்டுள்ளது. ஐக்கியதேசியக்கட்சிக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பிரசாரத்திற்கு பதிலளிக்கும் வாய்ப்புகளை அரசு ஊடகங்கள் வழங்க வேண்டும். தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்படவும் அரசதுறைக்கு தகுதியானவர்கள் நியமனம் பெறவும் அரசியலமைப்பு சட்டத்தின் 17 ஆம் பிரிவு அமுல் செய்யப்படவேண்டும்.