பல வருடங்களாக மன்னாரில் தேங்கிக் கிடந்த பெற்றோலிய வள ஆராய்ச்சிகள் ஜனாதிபதியின் நடவடிக்கை காரணமாக வெகு விரைவில் முன்னெடுக்கப்பட உள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை கம்பளை ஆண்டியா கடவத்தை என்ற இடத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது;
மத்திய கிழக்கு நாடுகளுக்கும் எமது ஜனாதிபதிக்கும் இடையே உள்ள இறுக்கமான உறவு காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. இன்று ஆட்சியில் உள்ள அரசு முஸ்லிம்களுக்கு அதிக சேவை செய்கிறது. காரணம் அதிகளவு முஸ்லிம் அமைச்சர்கள் உள்ளனர். கிழக்கைப் போன்றே ஏனைய பகுதிகளுக்கும் பரவலாக சேவைகள் இடம்பெறுகின்றன. இதே அடிப்படையில் மத்திய மாகாணத்திற்கும் பாரிய சேவை நடைபெற ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதிக்கும் அரபு நாடுகளுக்கும் இடையே காணப்படும் நெருக்கம் காரணமாக மத்திய கிழக்கு நாடுகள் எமக்கு உதவ முன்வந்துள்ளன. இதில் ஒரு அங்கமாகவே மன்னார் பகுதியில் பெற்றோலிய அகழ்வு நடவடிக்கைகளுக்கும் உதவ முன்வந்துள்ளன. இதன் காரணமாக நாமும் செல்வந்த நாடாக முடியும். பல வருடங்களாக மன்னார் பெற்றோலிய ஆராய்ச்சி தேங்கிக் கிடந்தன. ஜனாதிபதியின் முயற்சியும், மத்திய கிழக்கு நாடுகளின் ஒத்துழைப்பும் இன்று எமக்கு சாதகமாகியுள்ளன. எனவே, நாம் அனைவரும் ஜனாதிபதி தலைமையிலான ஐ.ம.சு.கூட்டணிக்கு வாக்களித்து அதனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்றார்.