கனடாவில் கம்லூப்ஸ் என்ற இடத்தில் பூர்வ குடிமக்கள் பள்ளி வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளி 1890-ம் ஆண்டு முதல் 1969-ம் ஆண்டுவரை நடத்தப்பட்டது. அதன் பின்னர் அரசு அந்த பள்ளியை பொறுப்பில் எடுத்தது. 1978-ல் பள்ளி மூடப்பட்டுவிட்டது.
ஆரம்பத்தில் பள்ளியை நடத்தியபோது பழங்குடி மக்களின் குழந்தைகள் கொல்லப்பட்டோ அல்லது வேறு வகையிலோ உயிரிழந்திருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது. அவர்களது உடல்களை பெற்றோர்களுக்கு தெரிவிக்காமல் புதைத்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ரேடார் உதவியுடன் அந்த எலும்புக்கூடுகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். மேலும் அங்கு பலரது உடல்கள் இருக்கலாம் என தேடப்பட்டு வருகிறது. இந்த குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் தற்போது உயிரோடு இருப்பதற்கான சாத்தியம் இல்லை. இது பற்றி முழுமையான விசாரணை நடத்தப்பட இருக்கிறது.
ஐரோப்பியர்கள் அமெரிக்க நிலப்பரப்பை கண்டுபிடித்து வட அமெரிக்கா, தென் அமெரிக்க கண்டங்களில் குடியேறினார்கள். அப்போது அந்த நாடுகளில் பூர்வ குடிமக்கள் ஏராளமானோர் வசித்து வந்தனர். அவர்கள் நாளை பிரச்சினை ஏதும் செய்துவிடக் கூடாது என்பதற்காக அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப்படுகொலை செய்தனர். இவ்வாறு லட்சக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இதனால் அமெரிக்க கண்டங்களில் பல இனங்கள் வேரோடு அழிந்தன. இதேபோலத்தான் கனடா நாட்டிலும் பூர்வ குடிமக்கள் ஏராளமானோரை கொன்று குவித்தார்கள். அங்கு நாகரிக ஆட்சி வந்த பிறகும்கூட பூர்வ குடிமக்களை ஒழிப்பது நிற்கவில்லை.
ஐரோப்பியர்கள் பூர்வ குடிமக்களுக்காக பள்ளிகளை நடத்தினார்கள். இது விடுதியுடன் கூடிய பள்ளி ஆகும். அவ்வாறு நடத்தப்பட்ட பள்ளிகளில் பல குழந்தைகள் மாயமான சம்பவங்கள் பலவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.