நாடு முழுவதும் பதிவு செய்யப்படாது இயங்கிவரும் மருந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, கிராமப் புறங்களில் இயங்கி வரும் இவ்வாறான மருந்து விற்பனை நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேற் கொண்ட ஆய்வில், 1981 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க சட்டத்திற்கிணங்க, மருந்துகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் கீழ், 2300 மருந்து விற்பனை நிலையங்கள் மாத்திரம் இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன. உரிய தகைமைகளைக் கொண்டிராத மருந்துக் கலவையாளர்கள் பணிபுரியும் மருந்து விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்படாமல் இயங்கி வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் சங்கம் தெரிவித்துள்ளது.
சுகாதார திணைக்களத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக பதிவு செய்யப்பட்டுள்ள மருந்து விற்பனை நிலையங்களில், உரிய தகைமைகளை கொண்ட மருந்துக் கலவையாளர் ஒருவராவது மருந்து விற்பனையின் போது பணிபுரிவது கட்டாய மெனவும் மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்சமயம் மருந்து விற்பனைக்கான உரிய தொழிற்தகைமைகளை கொண்டுள்ள 6800 மருந்தாளர்கள் இலங்கையில் உள்ளனர். உரிய அனுபவம், தகைமைகளைக் கொண்டிராத மருந்தாளர்கள் தவறான மருந்துகளை விநியோகிப்பதால் நோயாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சில நோயாளர்கள் இதனால் மரணத்தையும் எதிர் நோக்கியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.