இந்தியாவின் ஆந்திராவில் நாட்டு மருத்துவர் ஆனந்தையாவின் ஆயுர்வேத மருந்தை கொரோனா சிகிச்சைக்கு வழங்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கூட்ட நெரிசல் இல்லாமல் நாளை முதல் மருந்தை விநியோகிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணபட்டினம் என்ற இடத்தில், ஆனந்தையா என்ற நாட்டு மருத்துவர் கொரோனாவுக்கு ஆயுர்வேத மருந்து தருவதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்த மருந்து நல்ல பலன் தருவதாக அதனை எடுத்துக்கொண்ட மக்கள் தெரிவித்ததால், ஆயுர்வேத மருந்தை வாங்க ஏராளமான மக்கள் கிருஷ்ணபட்டினத்தில் குவிந்தனர். இருந்தபோதிலும், இந்த மருந்தால் பக்கவிளைவு ஏதேனும் உள்ளதா என கண்டறியும் வரை, மருந்தின் வினியோகத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
மருந்து, ஆயுஷ் அமைச்சக சோதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இந்நிலையில், ஆனந்தையாவின் ஆயுர்வேத மருந்தை கொரோனா சிகிச்சைக்கு நாளை முதல் விநியோகிக்க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது. அதேநேரம், கருப்பு பூஞ்சை நோய்க்கு, அவர் வழங்கிய கண் சொட்டு மருந்தை மட்டும் வேண்டாம் என்று தடை செய்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு ஆயுர்வேத மருந்து லேகியத்துடன், ஆங்கில மருந்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ள மக்களுக்கு ஆந்திர அரசு அறிவுறுத்தியுள்ளது.