சில மணிநேரங்களுக்கு முன்னதாக பிரித்தானிய அரசு இலங்கையை தனது சிவப்பு அபாய பட்டியலில் சேர்த்துக்கொண்டது. பிரித்தானியர்கள் எந்தெந்த நாடுகளுக்கு செல்வது என்ற முடிவை எடுப்பதற்கு வசதியாக வீதிப் போக்குவரத்து சமிஞை நிறப் பட்டியலை அறிமுகப்படுத்தியது. அதன்படி பச்சை நிறப்பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு பிரித்தானியர்கள் பெரும் கெடுபிடிகள் இல்லாமல் பயணம் செய்யக் கூடியதாக இருந்தது. மஞ்சள் அல்லது அம்பர் நிறப் பட்டியலில் அடங்கும் நாடுகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கும். இம்முறையின் படி சிவப்பு நிறப்பட்டியலில் உள்ள நாடுகளுக்கு அத்தியவசிய தேவையின்றி பயணிக்கக் கூடாது என பிரித்தானிய அரசு அறிவுறுத்துகின்றது. மேலும் இந்நாடுகளுக்கு பயணிப்பவர்கள் மீது நடைமுறை விதிகளும் கெடுபிடியாக இருப்பதுடன் இவர்கள் அரச கட்டுப்பாட்டில் உள்ள தனிமைப்படுத்தல் இடங்களில் இருவாரங்கள் வரை தனிமைப்படுத்தலுக்குள் வைக்கப்படுவர். பயணிகளே அதற்கான செலவுகளையும் பொறுப்பேற்க வேண்டும்.
இந்தப் பயணக் கட்டுப்பாடுகள் சுற்றுலா மற்றும் பயணத்துறையயை பாரதூரமாகப் பாதிப்பதுடன், பயணிகளது பயணச் செலவையும் மிகவும் அதிகரித்துள்ளது. மே இறுதிப்பகுதியில் திருமண நிகழ்வுக்குப் பாரிஸ் சென்றிருந்த தம்பித்துரை சஞ்சீவ்ராஜ் (படம்) ஈரோ ஸ்ராருக்கு செலுத்திய £200 பவுண் பயணக் கட்டணத்துடன் கோவிட் பரிசோதணைகளுக்காக £305 பவுண்கள் செலுத்தியதாக தேசம்நெற் க்கு ஆதாரங்களுடன் தெரிவித்தார். பிரித்தானியாவை விட்டு நீங்குவதற்கு முன் கோவிட் இல்லை என்ற சான்றிதழைப் பெற £150 பவுண்கள் செலுத்தி உள்ளார். பின்னர் பாரிஸில் அதனைப் புதுப்பிக்க மேலும் £50 பவுண்களைச் செலுத்தி உள்ளார். ஏனெனில் முதற் சான்றிதழ் 72 மணிநேரங்களிற்கே செல்லுபடியாகும் என தனக்கு அறிவுறுத்தப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் பின்னர் பிரித்தானியாவிற்கு திரும்பி வந்து 10 நாட்கள் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கோவிட் பரிசோதணைப் பொருட்களுக்காக £105 பவுண்கள் செலுத்தி உள்ளார். மொத்தத்தில் சஞ்சீவ்ராஜ் பாரிஸ் சென்று திரும்ப £505 பவுண்களைச் செலுத்தி உள்ளார். இதில் ஐந்தில் மூன்று பங்கு கோவிட் பரிசோதணைகளுக்காக தனியார் நிறுவனங்களுக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
தற்போது இலங்கையும் அபாயப்பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளதால் போகும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் இலங்கையில்; திரும்பி வரும் போது கோவிட் பரிசோதணை, தனிமைப்படுத்தல் என்று ஒவ்வொருவருடைய போக்குவரத்துக் கட்டணங்களும் இரு ஆயிரங்களைத் தொட்டு நிற்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரித்தானிய கொன்சவேடிவ் அரசினால் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள: கோவிட் பரிசோதணை மற்றும் தனிமைப்படுத்தல் இடங்கள்; இதன்மூலம் கொள்ளை இலாபமீட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போதைய பிரதமர் பொறிஸ் ஜோன்சன் பிரித்தானியாவின் நிதி நேர்மையற்ற ஒருவராகக் கருதப்படுகின்றார். அவருடைய வீட்டுத் திருத்த வேலைகள் தொடர்பிலும் அவர் பொதுப்பணத்தில் கை வைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.