எம்வி எக்ஸ் பிரஸ் பேர் என்ற சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட கப்பல் இரு வாரங்களாகியும் தொடர்ந்தும் எரிந்துகொண்டும் கடலுக்குள் வெடித்துச் சிதறிக்கொண்டும் உள்ளது. இலங்கை – இந்திய கரையோர கடற்படையினர் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டுவர முடிந்த போதும் பல முயற்சிகளை எடுத்த போதும் கப்பல் தொடர்ந்தும் எரிந்த வண்ணமே உள்ளது. தற்போது இலங்கையயை நோக்கி விசுகின்ற பருவக்காற்று இத்தீயை கட்டுப்படுத்த பெரும் தடையாக இருந்து வருகின்றது. கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் சிப்பந்திகள் 25 பேர் காப்பாற்றப்பட்டுவிட்டனர். ஆனால் கப்பலில் ஏற்றி வரப்பட்ட ஆபத்தான இரசாயணப் பொருட்கள் மற்றும் 300 தொன் எரிபொருட்கள் என்பன அளவிட முடியாத சேதத்தை இலங்கையின் கடற்பரப்பில் ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையின் மேற்கு கரையான நீர்கொழும்பு களுத்துறையைச் சுற்றியுள்ள 50 மைல் பிரதேசம் பாரிய பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளது. நுண் பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயணப் பொருட்கள்: நைற்றிக் அமிலம், சோடியம் குளோரைட் என்பன கடலில் கலப்பதுடன் கடல் வாழ் உயிரினங்களையும் பாதிப்படையச் செய்கின்றன. இப்பகுதிகளில் மீன் பிடிப்பதற்குத் தடைவிதிக்கப்பட்டு உள்ளதுடன் அயலில் உள்ள பகுதிகளிலும் மக்கள் கடலுணவுகளை பெற்றுக்கொள்ளத் தயக்கம் காட்டுகின்றனர். ஏற்கனவே கோவிட் இனால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள் தற்போது ஏற்பட்டுள்ள சுற்றுச் சூழல் நெருக்கடியால் மேலும் பொருளாதார நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.
“கடலுக்குள் செல்லாமல் வியாபாரத்தைச் செய்யாமல் எப்படி தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியும்?” தேசம்நெற்க்கு தெரிவிக்கின்றார். டேவிட் பெர்னான்டோ. நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் நீர்கொழும்புப் பகுதி மீனவர். இந்த அனர்த்தத்தால் சிறிது காலத்திற்கு மக்கள் கடல் உணவுகளை தவிர்க்கவே விரும்புவார்கள் என்று சொல்லும் டேவிட் பெர்னான்டோ அவர்கள குற்றம்சொல்ல முடியாது என்றும் அவர்கள் கடலுணவை சாப்பிடத் தயங்குவது நியாயம்தானே என்றும் டேவிட் பெர்னான்டோ தேசம்நெற் க்குத் தெரிவித்தார்.
கடற்பரப்பில் கடந்த இரு வாரங்களாக தொடரும் இந்த அனர்த்தம் சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. கரையொதுங்கும் கழிவுகள் எதனையும் தொட வேண்டாம் என கரையோரப் பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. ஏற்பட்டுக்கொண்டிருக்கும் அனர்த்தத்தை கட்டுப்படுத்தவும் கரையொதுங்கும் கழிவுகளை பாதுகாப்பானமுறையில் அகற்றவும் ஆயிரக்கணக்கான கடற்படையினர் பாதுகாப்பு அங்கிகளோடு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர்.