எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த விதம் தொடர்பில் முறையான விசாரணை மேற்கொள்ளுமாறு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உத்தரவிடக்கோரி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுற்றாடல் நீதிக்கான கேந்திர நிலையம் மற்றும் அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹேமந்த விதானகே மற்றும் மீனவர்கள் சிலரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த மனுவில் எதிர்மனு தாரர்களாக, இலங்கை துறைமுக அதிகாரசபை, கடல்மாசு தடுப்பு அதிகாரசபை, மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் நாரா நிறுவனம், துறைமுக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன உட்பட்ட சிலரின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
அண்மையில் இலங்கை கடல் எல்லைக்குள் பிரவேசித்த குறித்த கப்பல் தீப்பற்றியதால் பாரிய சுற்றாடல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால் மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்துள்ள அதேவேளை, நாட்டின் பொருளாதாரம் மற்றும் கடற்றொழில் துறைக்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.