முல்லைத் தீவில் மனிதாபிமான நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்துள்ளது. விடுதலைப் புலிகள் அரசின்பால் குற்றஞ்சாட்டுவதும், அரசு விடுதலைப் புலிகளின் பக்கம் குற்றஞ்சாட்டுவதுமாக காணப்பட்டு வரக்கூடிய இந்த நிலையில் மனித உயிர்கள் அழிந்து கொண்டிருக்கின்றன.
இலங்கையின் வடக்கே இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் மோதல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரதேசத்தில் இருந்து வெளியேறி இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த பொதுமக்கள் மீது முல்லைத்தீவு மாவட்டம் உடையார் கட்டுபகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 சிவிலியன்கள் கொல்லப்பட்டதுடன், 75 பேர் காயமடைந்துள்ளதாக இலங்கை இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்திருக்கின்றார்.
புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து உடையார்கட்டுப் பிரதேசத்தை நோக்கி வந்த இந்த சிவிலியன்களில் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ளவர்கள் உடனடியாக ஹெலிகொப்டர்கள் மூலம் அழைத்து வரப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவப் பேச்சாளர் தெரிவித்தார். உயிரிழந்த 19 பேரில் சிறுமி ஒருவரும், சிறுவர் ஒருவரும் அடங்குவர். புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 75 சிவிலியன்களில் 11 சிறுவர்கள், 31 ஆண்கள், 27 பெண்கள் அடங்குவதாக தெரிவித்த பிரிகேடியர், இவர்களில் 15 பேரின் நிலைமைகள் கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
படுகாயமடைந்தவர்கள் விமானப் படையினரின் உதவியுடன் ஹெலிகொப்டர் மூலம் உடனடியாக வவுனியா மற்றும் அநுராதபுரம் வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகவும் இராணுவப் பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
புலிகளின் அடக்குமுறைகளாலும், துன்புறுத்தல்களாலும் மிகவும் பாதிப்படைந்த அப்பாவி தமிழ் மக்கள் அரசாங்கத்தின் அழைப்பை ஏற்றும் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்பை நாடியும் கடந்த சில தினங்களாக வேகமாக வரத் தொடங்கினர் என்று தெரிவித்த பிரிகேடியர், இதனை தடுத்து நிறுத்தவே புலிகள் அப்பாவி பொது மக்களை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்களையும், துப்பாக்கிப் பிரயோகத்தையும் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். புலிகளின் மீது நம்பிக்கை இழந்த பொது மக்கள் மேலும் வருகை தரவுள்ளதாக தெரிவித்த இராணுவப் பேச்சாளர் வருபவர்களின் பாதுகாப்பு உட்பட தேவையான சகல வசதிகளையும் அரசாங்கமும், பாதுகாப்புப் படையினரும் மேற்கொண்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
இன்றையதினம் (11) இலங்கையிலிருந்து வெளிவந்திருக்கும் அனைத்து சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இந்தச் செய்திக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ரொய்ட்டர், பீ.பீ.ஸி, சீ.என்.எல். செய்திகளும் இச்செய்தியை இராணுவத் தரப்பினரின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் பற்றி விடுதலைப்புலிகள் இதுவரை உத்தியோகபூர்வமான எந்தவிதமான அறிவித்தல்களையும் வெளியிடவில்லை.
மறுபுறமாக முல்லைத்தீவு விஸ்வமடு வடக்கு சுந்தரபுரம் பகுதியிலுள்ள இடைத்தங்கல் முகாமில் நேற்றுமுன்தினம் (09) இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 30 பேர் பலியாகியுள்ளதாகவும், மேலும் 64 பேர் காயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவித்தன. இத்தாக்குதலில் 20 படையினரும் 10 பொதுமக்களுமாக 30 பேர் பலியாகியதாகவும், மேலும் 24 படையினரும், 40 பொதுமக்களுமாக 64 பேர் காயமடைந்ததாகவும் இராணுவத் தரப்பு அறிவித்திருந்தது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வரும் பொதுமக்களுடன் சேர்ந்து வந்த பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவரே இடைத்தங்கல் முகாமில் வைத்து குண்டினை வெடிக்க வைத்ததாகவும் இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்குள் வரும் மக்களைச் சோதனைக்குட்படுத்தும் இடத்திலேயே இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதல் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டது. ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில் விடுதலைப் புலிகள் நடத்தியுள்ள முதல் பெரிய மனித வெடிகுண்டுத் தாக்குதல் இதுவென்றும் குறிப்பிடப்பட்டது.
ஆனால், விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலிலேயே சுந்தரபுரம் பகுதியில் பொதுமக்களும் படையினரும் கொல்லப்பட்டதாக படைத்தரப்பு பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ள நிலையில், இடம்பெயர்ந்து வந்த மக்கள் மீது படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டிலேயே அவர்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மக்கள் கொல்லப்பட்ட இடத்தை படம்பிடித்துக் காட்டியிருந்த சிறீலங்கா இராணுவத் தரப்பு அங்கு படையினருக்கு சேதங்கள் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரங்களையும் காண்பிக்கவில்லை என்றும், குண்டு வெடித்து காயம்பட்டதற்கான அடையாளங்கள் இல்லாமல் துப்பாக்கி வேட்டுக்களிலேயே மக்கள் கொல்லப்பட்டதற்கான தடயங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் என்றும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம்
சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை நடத்தியதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர் என தமிழீழ விடுதலைப் புலிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை இன்று (11) புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது பாரிய இனப்படுகொலையை திட்டமிட்ட ரீதியில் அரங்கேற்றி வருகின்றது. அண்மைக்காலங்களில் தமிழர் தாயகப் பிரதேசத்தில் என்றும் இல்லாதவாறு கொடிய இனப் படுகொலை ஒன்று தமிழ் மக்கள்மீது சிங்கள அரசினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
நாளாந்தம் அப்பாவிப் பொதுமக்கள் பல நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் வருகின்றனர்.சிறிலங்காவின் அரச படைகள் வேண்டும் என்றே திட்டமிட்டு இந்த இனப்படுகொலையை அரங்கேற்றி வருகின்றது. குறிப்பிட்ட சில பிரதேசங்களை பாதுகாப்பு பிரதேசங்கள் எனப் பிரகடனப்படுத்தி விட்டு அப்பிரதேசத்திற்குள் மக்களையும்,அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தையும், ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்களையும் வரவழைத்து வேண்டும் என்றே பீரங்கித் தாக்குதல்களையும் வான் தாக்குதல்களையும் மேற்கொண்டு மக்களை தொடர்ச்சியாக கொன்றொழித்து வருகின்றது.
அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளும் இதற்கு கண்கண்ட சாட்சிகளாக உள்ளனர். இங்குள்ள மருத்துவமனைகள் எல்லாவற்றின் மீதும் ஆட்லறி எறிகணைகளை வீசி செயலிழக்கச் செய்துள்ளனர். அழிவிற்கு உட்படுத்தப்பட்டிருக்கும் இந்த மக்களின் அவலங்களை வெளியுலகத்திற்குப் போகாதவண்ணம் தொலைத்தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டுள்ளன.
ஊடகவியலாளர்களோ, அனைத்துலக தொண்டு நிறுவனங்களோ, மனித உரிமை மீறல்களை கண்காணிப்பதற்கான கண்காணிப்பாளர்களோ எமது பிரதேசத்திற்குள் வருவது சிங்கள அரசினால் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. எமது பிரதேசத்திற்குள் கொண்டு வரப்படும் அத்தியாவசிய மருந்துகள் மீதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பாரிய காயங்களுக்குள்ளாகும் மக்கள் மருந்தின்மையால் நாளாந்தம் இறந்து கொண்டே இருக்கின்றனர்.போர் நடக்கும் பிரதேசத்திற்குள் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகளும் அரசினால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மக்கள் நாளாந்தம் நாடோடிகள் போன்று இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர். காடுகளிலும் மேடுகளிலும் விலங்குகளைவிட மோசமான முறையில் வாழ்க்கை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டும் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமுற்றும் அல்லற்பட்ட வண்ணம் உள்ளனர்.
21 ஆம் நூற்றாண்டின் படுமோசமான மனித அவலம் தமிழ் மண்ணில் சிங்கள அரசினால் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்த மனித அவலத்தை முழு உலக நாடுகளும் கண்டிப்பதோடு நின்றுவிடாமல் அரசிற்கு அழுத்தம் கொடுத்து போரை நிறுத்தி அரசியல் பேச்சுவார்த்தை மூலம் இனப்பிரச்சிளைக்குத் தீர்வுகான முன்வரவேண்டும்.
ஓரிரு நாட்களுக்கு முன்னர் அப்பாவி பொதுமக்கள் மீது சிறிலங்கா படைகள் உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கிளஸ்ரர் குண்டுகளை வீசிவிட்டு நாம் பொதுமக்கள் மீது தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டதாக பொய்யான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நாங்கள் மனித உரிமைகளுக்காக போராடும் ஓர் விடுதலை இயக்கம். எமது மண்ணின் விடுதலைக்காக எமது மக்களும் நாங்களும் அளப்பரிய தியாகங்களை புரிந்தவண்ணம் உள்ளோம்.
இவ்வாறான மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம். எமது பிரதேசத்திற்கான தொலைத்தொடர்புகளை துண்டித்து விட்டு தனது ஊடகங்களினூடாக சிறிலங்காஅரசு பொய்யான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றது என்பதை அனைத்துலக சமூகத்திற்கு தெளிவுபடுத்த விரும்புகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.(இவ்வறிக்கை புதினம் இணையத்தளத்தில் பிரசுரமாகி இருந்தது)
முல்லைத்தீவில் படையின் தாக்குதல்.
இந்நிலையில் முல்லைத்தீவு பிரதேசத்தின் மீது இராணுவத்தின் எறிகணைத் தாக்குதல்கள் காரணமாக பாரிய உயிரிழப்புகளும், காயங்களும் ஏற்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. வன்னியில் பாதுகாப்பு வலயப் பிரதேசங்கள் எங்கும் திங்கட்கிழமை சிறிலங்கா வான் மற்றும் தரைப்படையினர் நடத்திய தாக்குதல்களில் 36 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 76 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் இதேவேளை, உறவினர்கள் யாருமற்ற நிலையில் இருந்த பல உடல்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் அடக்கம் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள தேவிபுரம், வள்ளிபுரம், சுதந்திரபுரம், மாத்தளன் உள்ளிட்ட பகுதிகளில் திங்கட்கிழமை காலை முதல் சிறிலங்கா படையினர் பரவலாக எறிகணைத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இத்தாக்குதலின் போது 6 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள மாத்தளன் பகுதியில் கடுமையான பீரங்கித் தாக்குதலில் 16 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 49 பேர் படுகாயமடைந்துள்ளனர். இடம்பெயர்ந்த தமிழர்கள் தங்கியிருந்த கொட்டகைகளின் மீதே எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு
எனவே, இரு தரப்பும் ஒருவர் மீது ஒருவர் விரலை நீட்டி குற்றஞ்சாட்டிக் கொண்டிருக்கின்றனரே தவிர, மனித உயிர்களின் இழப்புகளை உடன் நிறுத்துவதற்கான எதுவிதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் ஏற்பாடு
இந்நிலையில் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவு மாவட்டத்தில் மோதலில் இடையில் அகப்பட்ட நோயாளிகள் மற்றும் காயம்பட்டவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றுவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கப்பல் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
அந்த வகையில், முதல் கட்டமாக நேற்றையதினம் சுமார் 250 பேர்வரை சிகிச்சைக்காக புதுமாத்தளனில் இருந்து இந்த கப்பலில் திருகோணமலைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
மோதலில் ஈடுபடுகின்ற இரு தரப்பினரின் இணக்கத்துடனேயே இந்தக் கப்பல் மூலமான பாதுகாப்பான வெளியேற்றத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்புக்கான பேச்சாளர் சரசி விஜேரட்ண பிபிசி செய்திச்சேவைக்குத் தெரிவித்திருந்தார். மேலதிக சிகிச்சைக்காக அங்கிருந்து அனுப்பப்பட வேண்டியவர்கள் இன்னும் ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
புதுமாத்தளன் கடற்கரையிலிருந்து சுப்பல் வரையிலான கடற்பகுதியில் நோயாளர்களை மிகுந்த கவனத்துடன் அழைத்துச் செல்வதற்கு உள்ளுர் மீனவர்கள் தமது படகுகளை வழங்கி பெரிதும் ஒத்துழைத்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு தெரிவித்திருக்கின்றது.
நோயாளர்கள் அழைத்துச்செல்லப்பட்ட இந்தக் கப்பலில் மருத்துவர்கள், செஞ்சிலுவைக்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் பிரயாணம் மேற்கொண்டதாகவும் சர்வதேச செஞ்சிலுவைக்குழு கூறியிருக்கின்றது.
அரசாங்கம் வேண்டுகோள்
மோதல் பிரதேசத்திலிருந்து தப்பிவரும் பொதுமக்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தாதிருப்பதற்கு, அவர்கள் மீது சர்வதேச சமூகம் அதி உச்ச அழுத்தத்தைக் கொடுக்க வேண்டுமென்று அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு சிவிலியன்கள் பாதுகாப்பாக வருவதற்கு இடமளிக்குமாறு, ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் புலிகளை வலியுறுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். விசுவமடு பகுதியில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலைத் தொடர்ந்து, நேற்று அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த பொதுமக்கள் மீது புலிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும், இந்தச் சம்பவத்தையடுத்து அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இந்த வேண்டுகோளை விடுப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
நலன்புரி நிலையத்தில் வைத்துத் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட போதிலும், தொடர்ந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்த வண்ணம் உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். நேற்று முன்தினம் இரவிலிருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு வந்துள்ளனர். நேற்றைய தினம் ஐந்து முதல் ஆறாயிரம் பேர் வரை எதிர்பார்க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை, மீட்கப்படாத பிரதேசங்களிலிருந்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வரும் பொதுமக்களை உள் வாங்குதற்கென நேற்று முதல் புதிய செயற்றிட்டம் நடை முறைப்படுத்தப்படுகின்றது. சிலிவியன்களும், பொதுமக்களும் பாதிப்படையாதிரு க்கும் வகையில், சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர் தேவையானதும், பொருத்தமானதுமான பாதுகாப்பு வழிமுறையை இராணுவத்தினர் பின்பற்றுகிறார்கலென்றும் அமைச்சர் சமரசிங்க தெரிவித்தார்.
இலங்கையில் மோசமடையும் மனித உரிமைகள் நிலைவரம்
இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைவரம் குறித்து ஐ.நா.வின் சுயாதீன நிபுணர்கள் 10 பேர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக விமர்சனக்குரல்களுக்கான இடம் சுருங்கி வருவது தொடர்பாகவும் பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சியங்களுக்கு எதிரான அடக்குமுறை அச்சம் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
செயற்பாட்டுத் திறனற்ற விசாரணைகள் பற்றாக்குறையாக இருப்பதானது மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தண்டனையிலிருந்தும் விலக்குப் பெறும் நிலைமைக்கு வழிவகுத்து விடும் என்றும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.
அத்துடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலையும் ஐ.நா. நிபுணர்கள் கண்டித்துள்ளனர்.
வடக்கு மோதல்களால் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் இடம்பெயர்ந்திருப்பதுடன், மோதலில் சிக்கியுமுள்ளனர். அதேசமயம், இந்தப் பொதுமக்கள் எதிர்நோக்கும் அவல நிலை குறித்தும் இழப்புகள் தொடர்பாகவும் ஐ.நா. நிபுணர்கள் அதிகளவு கவலையை வெளியிட்டுள்ளனர். அத்துடன், மனிதாபிமான உதவிகள் அந்த மக்களை சென்றடைவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்திருப்பதுடன் இது அடிப்படை பொருளாதார, சமூக உரிமைகளை மோசமாக மீறும் செயலெனவும் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இலங்கையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் இல்லை.
தற்போதைய வன்னி மனிதாபிமான நெருக்கடி பற்றி இலங்கையில் மாத்திரமல்ல, சர்வதேச ரீதியில் அனைவரும் தெரிந்து வைத்துத்தான் உள்ளனர். இலங்கையில் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்று மேற்குலக நாடுகள் பலவற்றில் புலம்பெயர்ந்தவர்களால் பல கவனயீர்ப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்தும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், இத்தகைய போராட்டங்களினால் சர்வதேச ரீதியில் இலங்கை அரசுக்கு பலமான அழுத்தத்தை ஏற்படுத்திய நிகழ்வொன்றையும் காணமுடியவில்லை. தற்போதைய நிலையில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டங்களால் பாரியளவில் ஏதாவது சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியாகவே மாறிக்கொண்டு வருகின்றது.
மறுபுறமாக தமிழகத்திலும் யுத்தம் நிறுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் மிக விசாலமான அளவில் முன்னெடுத்துச் செல்லப்படுவதை அவதானிக்கின்றோம். ஊர்வலங்கள், கடையடைப்புகள், கண்டனக் கூட்டங்கள், உண்ணாவிரதப் போராட்டங்கள், தீக்குளிப்புகள் என பல்வேறு கண்டன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட போதிலும்கூட, இந்திய மத்திய அரசின் அழுத்தமான நெருக்கடிகள் எதையும் காணக்கூடியதாக இல்லை.
இத்தகைய அனைத்து கண்டன நடவடிக்கைகளும் இலங்கை அரசுக்கு யுத்த நிறுத்தத்துக்கான அழுத்தத்தை வழங்குகின்றனவே தவிர, புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மக்களை விடுவிப்பதற்கான கவனயீர்ப்பாக எந்த நடவடிக்கைகளும் நடைபெறவில்லை என சில அரசியல் அவதானிகள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
வெளிநாடுகளில் யுத்தம் நிறுத்தம் தொடர்பாக தமிழ் மக்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளைப் போல இலங்கையில் அரசுக்கு அழுத்தத்தைக் கொடுக்கக்கூடிய நடவடிக்கைகள் இதுவரை பாரியளவுக்கு மேற்கொள்ளப்படவில்லை.
குறிப்பாக இன்று தென்பகுதியை மையமாகக் கொண்டு பல தமிழ் அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. மலையகப் பகுதிகளிலும் பல தமிழ் அரசியல் கட்சிகள் காணப்படுகின்றன. ஆனால், இவைகள் திட்டமிட்ட அடிப்படையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டதாக காணமுடியவில்லை.
அண்மைக் காலங்களில் இலங்கையில் சிறிய சிறிய விடயங்களுக்கெல்லாம் பாரியளவிலான கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். அரசியல்கட்சிகள், எதிர்க்கட்சியினர், ஊடக அமைப்புகள் மற்றும் பொது அமைப்புகள் என கொழும்பில் கோட்டைப் புகையிரத நிலையம், லிப்டன் சுற்றுவட்டம் போன்ற பிரதேசங்களில் மாத்திரமல்லாமல், கொழும்பை அண்மித்த பிரதேசங்களிலும் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகள், ஊர்வலங்களை நடத்தியதை நாம் அறிவோம்.
இந்த வன்னி மனிதாபிமான நெருக்கடியின் போது ஏன் இத்தகைய அமைப்புகள் மௌனம் சாதிக்கின்றன என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. எதிர்க்கட்சியினர் மட்டுமல்லாமல் தமிழ்க் கட்சிகள் அமைப்புகள் கூட ஒன்றிணைந்து ஏன் பாரிய கவனயீர்ப்பு ஊர்வலங்களையோ போராட்டங்களையோ நடத்த முன்வரவில்லை என்பது சிந்திக்க வேண்டியதாகவேயுள்ளது. கடந்த வாரத்தில் ஒரு சில கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும்கூட, ஊடகங்களிலும் அவை முக்கியத்துவப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. எனவே, இலங்கையினுள் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையில் பாரிய அழுத்தத்தை கொடுக்கக்கூடிய வகையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை சிந்திக்கக் கூடிய விடயம் என்பதை அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே, அரசு யுத்தத்தை நிறுத்தமாட்டோம் என பிடிவாதமாக இருக்கும் நிலையில் வன்னியிலிருந்து மக்களை மீட்பதற்கு இலங்கையில் தமிழ்க்கட்சிகளும், எதிர்க்கட்சிகளும் பேதங்களை மறந்து இரு தரப்பாருக்கும் அழுத்தங்களைக் கொடுக்காவிடின் வன்னி மக்களின் நிலைமை மேலும் மேலும் பரிதாபகரமாக மாறக்கூடியதாகவே அமைந்துவிடும்.
மத்தியஸ்தத்துக்கு தயார்; கிழக்கு திமோர் ஜனாதிபதி
இலங்கையில் முன்னெடுக்கப்படும் யுத்தம் நிலையான சமாதானத்தை தேடித்தராதென தெரிவித்திருக்கும் கிழக்குத் திமோர் ஜனாதிபதி ஜோஸ் ராமொஸ் ஹோர்டா, சமாதான இணக்கப்பாட்டுக்கு எந்தவழியிலாவது பங்களிப்பு வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
கசப்பான முடிவுக்காக எந்தத் தரப்பினராலும் இந்த யுத்தம் முன்னெடுக்கப்பட்டாலும் நீண்டகால சமாதானத்தை அது ஏற்படுத்த மாட்டாது என்று நோபல் பரிசு பெற்றவரான ஜோஸ் ராமொஸ் ஹோர்டா கூறியுள்ளார்.
உள்நாட்டு யுத்தம் பாரிய அழிவையே ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ள கிழக்குத் திமோர் ஜனாதிபதி, ஏற்கெனவே துன்பமடைந்திருக்கும் மக்களை தொடர்ந்திருக்குமாறோ அல்லது அவர்களின் விருப்பத்திற்கு எதிராக செல்லுமாறோ நிர்ப்பந்திக்கக்கூடாது என்றும் கூறியுள்ளார். அத்துடன், பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வுகாண முன்வருமாறு விடுதலைப்புலிகளை அவர் வலியுறுத்தியிருக்கிறார்.
கிழக்கு திமோர், ஜனாதிபதியின் அறிக்கையை கிழக்கு திமோர், இந்தோனேசியா அக்ஷன் நெற்வேர்க் வெளியிட்டுள்ளது.
kula
பொதுமக்கள் மீதான தற்கொலை குண்டுத் தாக்குதல்: விடுதலைப் புலிகள் மறுப்பு–புலிகளின் அரசியல்துறை இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை– மனித சமுதாயம் வெறுக்கத்தக்க காட்டுமிராண்டித்தனமான செயலை நாம் புரியவில்லை என முற்றாக மறுக்கின்றோம்.– புதினம்
புனிதமான அமைப்பின் புதின மறுப்பறிக்கை.
chandran.raja
புதினம் இணையத்தளம் புலிகளின் நேரடியாகவும் மறைமுகமாகவும் உத்தியோகபூர்வ அந்தஸ்தைப் பெற்றது. நடேசண்ணையின் தராதரத்தை பெற்றது. புதினம் தமிழ்மக்களுக்கு பல சாதனைகளைப் படைத்திருக்கிறது செஞ்சோலையில் இலங்கை ராணுவம் 160 மாணவ மாணவிகளை குண்டுவீசி கொலை செய்தது அல்லவா? குண்டைவீசச் சொல்லி புதினம் இணையத்தளமூலமாகத்தான் சிங்களஉளவுதுறைக்கு தகவல் சொல்லி அனுப்பியது.
வங்காலை மாட்டின்மூர்த்தி குடும்பத்தின் கொலையும் அப்படித்தான் சிங்களராணுவத்திற்கு தெரியும் முன்பே புதினம்இணையத்தளம் மூலமாகத் தான் உலகம் முழுக்க பரவவிடப்பட்டது.
ஐ.நாடு இலங்கை தலைமைபொறுப்பாளர் “கொத்தணிகுண்டை” ராணுவம் போடவில்லை என்று ஒப்புக்கொண்டதுடன் இந்தவகைகுண்டு சாதாரண செல்லடிப்பதைப்போன்று செயல்படுத்தக்கூடியதே என்பதையும் ஒப்புகொண்டார். அப்படியென்றால்?
watch
“Tamil nationalist feelings will not be gone even if the LTTE leadership is gone. The question is if and how it will be politically mobilised,” she says.
http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7872814.stm
இலங்கையில் கவனயீர்ப்பு நடவடிக்கைகள் இல்லை.
People in Sri Lanka are scared.?
Mr Cool
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் மீது தமிழீழ விடுதலைப்புலிகள் துப்பாக்கி சூட்டை நடத்தியதாக படையினர் வெளியிட்ட குற்றச்சாட்டை தமிழீழ விடுதலைப்புலிகளின் புதுக்குடியிருப்பு பிரிவு அரசியல் பொறுப்பாளர் சி இளம்பரிதி மறுத்துள்ளார்.
இலங்கை படையினரின் இராணுவக் கொமாண்டோக்களே பாதுகாப்பு வலயத்தினுள் பிரவேசித்து உடையார்கட்டு சுதந்திரபுரத்தில் நேற்று தாக்குதலை நடத்தியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
கடந்த சில வாரங்களாக பொதுமக்களை பாரியளவில் கொலை செய்த இலங்கைப் படையினர் தற்போது தமது தவறுகளை திசை திருப்பவே இவ்வாறான பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் சர்வதேச சமூகம் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறை கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
கொழும்பு அரசாங்கம், நாள்தோறும் பாதுகாப்பு வலயத்தில் உள்ள நூற்றுக்கணக்கான பொதுமக்களை கொலை செய்கிறது. மருத்துவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துகிறது. அத்துடன் உணவையும் மருந்தையும் ஆயுதமாக பயன்படுத்துகிறது என்றும் இளம்பரிதி குற்றம் சுமத்தியுள்ளார்
எனினும் தமிழக மக்களும் புலம்பெயர்ந்துள்ள மக்களும் உண்மை நிலையை உணர்ந்து தமது சர்வதேச அழுத்தங்களை கொடுத்து வருகிறார்கள். இதனையடுத்தே இலங்கை அரசாங்கம் தமது பொய் பிரசாரங்களை முடுக்கிவிட்டுள்ளது என இளம்பரிதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை இடம்பெயர்ந்துள்ள மக்கள் படையினரால் துன்புறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் உள்ளாவதாக தெரிவித்துள்ள இளம்பரிதி, குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் தனிமைப்படுத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
puvanan
சம்பூரில் வீழ்ந்த குண்டுகளுக்கும், கிழக்கு மாகாணத்தில் வீழ்ந்த குண்டுகளுக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பிரித்தறியும் அரசியலொன்று இருந்தது. அங்கே, வீழ்ந்த குண்டுகளெல்லாம் வெறுங் காடுகளுக்குள் வீழ்ந்ததென்று எண்ணியிருப்பார்கள். அதனால் யுத்தத்தை நிறுத்துவெனச் சொல்லமுடியாது தந்திரோபாய ரீதியான புலிகளின் பின் வாங்கலுக்கு வியாக்கியானம் கொடுத்து வந்தார்கள். இப்போது, அதே குண்டுகள் வன்னியைப் பதம் பார்க்கும்போது மிக மூர்க்கமாகக் குரல் கொடுப்பவர்கள் அன்றே இதைச் செய்திருந்தால் போராட்டத்தின் திசையே மாறியிருக்கலாம்.மக்கள் இவ்வளவு அழிவையும் தவிர்த்துப் புலிகளும் தமது போராளிகளைக் காத்து சமாதானமாக ஒரு தீர்வை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.-சிறி ரங்கன்-தமிழரங்கம்.
சத்தியமான வார்த்தைகள்! தமிழீழ வெறி கண்களை புத்தியை மனிதத்தன்மையை பின்னுக்கு தள்ளி விட்டிருந்தது