மகாத்மா காந்தியின் பேத்தியும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் எம்பியுமான இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு பண மோசடி வழக்கில் தென்னாபிரிக்க நீதிமன்றம் 7 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
இந்தியாவிலிருந்து தென் ஆபிரிக்காவுக்கு தனக்கான சரக்குகள் (புடவைகள்) வந்துள்ளதாகவும், ஆனால், இறக்குமதி செலவுகள் மற்றும் சுங்கக் கட்டணத்தை செலுத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும், துறைமுகத்தில் உள்ள பொருட்களை விடுவிக்க அவசரமாக பணம் தேவை எனவும் தொழிலதிபரான மகாராஜ் என்பவரிடமிருந்து ராம்கோபின் 6 மில்லியன் தென்னாபிரிக்க ரெண்ட் (சுமார் 8 .7 கோடி இலங்கை ரூபா) பணம் பெற்றுள்ளார்.
இறக்குமதி செய்யப்படாத சரக்கு தொடர்பில் போலி ஆவணங்களை மகாராஜிடம் காண்பித்து இவ்வாறு அவர் பணம் பெற்றுள்ளார். பின்னர் குறித்த ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டதையடுத்து, தென்னாபிரிக்காவின் டர்பன் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகாராஜ் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்தார்.
பின்னர் இந்த வழக்கில் பிரதிவாதியான ஆஷிஷ் லதா ராம்கோபின் 50 ஆயிரம் ரண்ட் பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டார்.
நீண்ட விசாரணையின் பின்னர் ஆஷிஷ் லதா ராம்கோபின் குற்றவாளி என நிரூபணமானதையடுத்து, அவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதித்து நேற்று (7) தீர்ப்பளிக்கப்பட்டது.
இதேவேளை, இந்த தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.