“45 ஆண்டுகள் இராணுவ மற்றும் அரசியல் வாழ்க்கையில் எப்போதும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டதில்லை.” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக தன் சம்பந்தமாக பல்வேறு பொய்ப் பிரசாரங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்திய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அங்கு மேலும் பேசிய அவர்,
தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்ற சிலரை மீண்டும் திரும்ப அழைத்து வரவில்லை. அதற்காக நான் எவருக்கும் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட நபர்களுக்கு ஆடைகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மட்டுமே நான் வழங்கினேன்.
இது மனிதாபிமானம் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கை. என்னை மாத்திரமல்ல எனது மகனையும் சம்பந்தப்படுத்தி பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
அந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை .45 ஆண்டுகள் இராணுவ மற்றும் அரசியல் வாழ்க்கையில் எப்போதும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டதில்லை.
நிலவை பார்த்து நாய்கள் குரைக்கும், நரிகள் ஊளையிடம். பொய்ப் பிரசாரங்கள், சேறுப்பூசும் நடவடிக்கைகளால் நான் தளர்ந்து போய்விட மாட்டேன் எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.