“எரிந்து கொண்டிருக்கும் எக்ஸ்பிரஸ் பேர்ள் சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்திற்காக சில பௌத்த தேரர்கள், அரசியல்வாதிகளும் செயற்படுகின்றனர்.” என இலங்கையை பாதுகாப்போம் அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
நாட்டின் முன்னணி சூழல் பாதுகாப்பு சார்ந்த அமைப்பான இலங்கையை பாதுகாப்போம் அமைப்பின் செயலாளரான ஆனந்த சாகர தேரர் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றி எரிந்து தற்போது சிறிது சிறிதாக கடலில் மூழ்கிவருகின்றது. குறித்த கப்பலின் எண்ணெய் தற்போது கடல்நீரில் கலந்துவருவதாக வெளிநாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சிங்கப்பூரைச் சேர்ந்த கப்பலின் உரிமை நிறுவனம் இதுகுறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றது.
கடந்த முறை நியூ டயமன்ட் கப்பலினால் தென்னிலங்கை கடற்பிரதேசத்திற்கு ஏற்பட்ட பாதிப்பிற்காக இலங்கை அரசாங்கம் கோரிய 20 பில்லியனை நட்டஈடாகக் கொடுக்காமல் நாட்டிலிருந்து தப்பிச்சென்ற நிறுவனம் தற்போது இந்த சிங்கப்பூர் கப்பல் நிறுவனத்தின் இலங்கை பிரிவிலுள்ளவர்களுடன் திரைமறைவில் செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்த நிறுவனத்திற்காக தற்போது ஒரு சில பௌத்த தேரர்கள், அரசியல்வாதிகளும் செயற்படுகின்றனர். உடனடியாக இந்த நாட்டிற்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு குறித்த சிங்கப்பூர் நிறுவனமும் அதேபோல அதன் இலங்கை பிரதிநிதிகளும் பொறுப்புகூற வேண்டும். அதேபோல நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்தும் இன்று வினவ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் ஒருவேளை கொழும்பு துறைமுகத்திற்குள் வந்து தீப்பற்றி எரிந்து வெடித்துச் சிதறியிருந்தால் எத்தனை பேர் உயிரிழந்திருப்பார்கள்.
அதேபோல இந்த நாட்டின் துறைமுகம் மற்றும் இலங்கை கடற்படையினர் இந்தத் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர முடிந்தது என்றால் அதற்கான விசாரணையை நடத்த ஏன் முடியவில்லை? அதற்காக வெளித்தரப்பு அழுத்தங்கள் இருக்கின்றதா என்பதை கேட்கின்றோம். யாருடைய வர்த்தக ஒப்பந்தம் இதற்கு அழுத்தமாக உள்ளது? ஆகவே 50 பில்லியன் டொலர்கள் வரை இலங்கைக்கு குறித்த சிங்கப்பூர் நிறுவனம் நட்டஈடாக வழங்க வேண்டும்.” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.