100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிப்பு !

அரசாங்கத்தின் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தில் திருகோணமலை மாவட்ட தமிழ், முஸ்லிம் பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதால் அவற்றை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நகர அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக்க கொடஹேவாவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இராஜாங்க அமைச்சருக்கு அவர் எழுதிய கடிதத்திலேயே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் நகர அபிவிருத்தி யோசனைக்கமைய நடைமுறைப்படுத்தப்படும் 100 நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய், சேருவில, பதவிசிறிபுர மற்றும் குச்சவெளி பிரதேசத்தின் புல்மோட்டை ஆகிய பிரதேசங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.

திருகோணமலை மாவட்டம் பல்லின சமூகத்தினரும் சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்கின்ற ஒரு மாவட்டம். இங்கு நீண்ட காலமாக இன ஒற்றுமை பேணப்பட்டு வருகின்றது.

திருகோணமலை, வெருகல் போன்ற பிரதேசங்கள் தமிழ் மக்களை அதிகமாகக் கொண்ட பிரதேசங்கள். கிண்ணியா, மூதூர், குச்சவெளி, தம்பலகமம் போன்ற பிரதேசங்கள் முஸ்லிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்கள். அதேபோல கந்தளாய், சேருவில, மொரவௌ, கோமரங்கடவெல, பதிவிசிறிபுர போன்ற பிரதேசங்கள் சிங்கள மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட பிரதேசங்களாகும்.

நாட்டில் வாழ்கின்ற சகல மக்களையும் உள்ளடக்கிய வகையில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் கொள்கையாகும். இந்தக் கொள்கை திருகோணமலை மாவட்ட நகரத் தெரிவில் கவனத்தில் கொள்ளப்படாமை குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன்.

எனவே, இந்தக் குறையினை நிவர்த்திக்கும் பொருட்டு கிண்ணியா, மூதூர் மற்றும் வெருகல் போன்ற பிரதேசங்களையும் இந்த நகர அபிவிருத்தி திட்டத்தில் உள்வாங்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் – எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Show More
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *