முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைகளின் 12 வருடப்பூர்த்தியையொட்டி அமெரிக்க காங்கிஸ் கட்சியின் பிரதிநிதியான டெபோரா கே.ரோஸினால் ‘ பொறுப்புக்கூறலை நிலைநாட்டும் நோக்கிலான செயற்திறன்மிக்க சர்வதேசப் பொறிமுறை ‘ மற்றும் ‘ இலங்கையில் நிரந்தர அரசியல் தீர்வு ‘ ஆகிய தலைப்புக்களில் கடந்த மேமாதம் 18 ஆம் திகதி அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையில் தீர்மானமொன்று முன்வைக்கப்பட்டது .
இலங்கையில் போர் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு 12 வருடங்கள் கடந்துள்ளமையையும் , இதன்போது முள்ளிவாய்க்காலில் இராணுவத்தினரால் பாரிய மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையையும் அந்தத் தீர்மானம் ஏற்றுக்கொண்டிருந்தது . அதேவேளை இலங்கைவாழ் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கான யிரிழப்புக்களுக்கும் காணாமலாக்கப்படல் சம்பவங்களுக்கும் இடப்பெயர்வுகளுக்கும் முகங்கொடுத்துள்ளனர் என்று அத்தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது .
இலங்கை தொடர்பில் அமெரிக்க காங்கிரஸில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தில் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் தமிழ் மக்களின் சுதந்திரத்துக்காக போராடின என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தீர்மானம் தொடர்பில் இலங்கை தனது ஆட்சேபனையைத் தெரிவித்திருந்தது. அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவர், இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டு நகர்த்த வேண்டாம் என்று கோரியிருந்தார். வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் துணைத் தூதரை நேரில் அழைத்து கண்டனம் வெளியிட்டிருந்தார்.
இவ்வாறானதொரு நடவடிக்கை ஏன் இலங்கை அரசு அவசர அவசரமாக மேற்கொள்கின்றது என்று அமைச்சர் விமல் வீரவன்சவிடம் ஊடகங்கள் வினவியபோது,
“இலங்கை தொடர்பான விடயத்தைக் குறிப்பிட்டு அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியமையால்தான் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்தோம். கண்டனங்களையும் தெரிவித்தோம். எமது இந்த நடவடிக்கை அவர்களின் மீதான தீர்மானத்தின் அச்சத்தால் எடுக்கப்பட்டது என்று எவரும் அர்த்தம் கற்பிக்கக் கூடாது. அது தவறு.”இவ்வாறு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
“அமெரிக்க காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகளின் இலங்கை மீதான தீர்மானம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் அமைந்துள்ளது. அப்பட்டமான பொய்க்குற்றச்சாட்டுக்கள் இந்தத் தீர்மானத்தில் உள்ளன. இந்தத் தீர்மானத்துக்கு இலங்கை அரசு வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
தீர்மானம் தொடர்பான இலங்கை அரசின் நிலைப்பாடு வொஷிங்டனுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. தீர்மானம் போல் இலங்கை அரசை அடிபணிய வைக்கும் நோக்கில் அமெரிக்க காங்கிரஸ் தீர்மானமும் தயாரிக்கப்பட்டுள்ளது. எனினும், இரு தீர்மானங்களையும் நாம் அடியோடு நிராகரிக்கின்றோம்.
அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம், இலங்கை மீதான தீர்மானம் என்றபடியாலேயே அமெரிக்க அதிகாரிகளை அரச தரப்பினர் நேரில் சந்தித்துப் பலத்த கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அச்சம் காரணமாகவே அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்தது என எவரும் அர்த்தம்கொள்ளக்கூடாது” – என்று பதிலளித்தார்.