எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் மீது மாத்திரம் சுமத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியை நாம் நிராகரிப்பதாக தெரிவித்து அரசாங்கத்தில் அங்கத்துவம் வகிக்கும் 8 பங்காளி கட்சிகளின் தலைவர்கள் கையெழுத்திட்டு கூட்டு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.
மக்கள் மத்தியில் அரசாங்கம் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்யும் வகையிலான இவ்வாறான செயற்பாடுகளை தோல்வியடைச் செய்வது ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரது பொறுப்பாகும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த அறிக்கையில் எங்கள் மக்கள் சக்தி கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரதன தேரர் , தேசிய சுதந்திர முன்ணியின் சார்பில் அதன் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்ச, ஜனநாயக இடதுசாரி முன்னணி சார்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜ கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தேசிய காங்ரஸ் சார்பில் ஏ.எல்.எம்.அத்தாவுல்லா, ஸ்ரீலங்கா கம்யூனிச கட்சி சார்பில் ஜி.வீரசிங்க , ஐக்கிய மக்கள் கட்சி சார்பில் டிரான் அலஸ், ஸ்ரீலங்கா மக்கள் கட்சி சார்பில் அசங்க நவரத்ண ஆகியோர் இந்த கூட்டு அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது :
எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பான தீர்மானத்தை வலுசக்தி அமைச்சர் மீது மாத்திரம் சுமத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முயற்சியை நாம் நிராகரிக்கின்றோம். அதற்கான காரணம் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கான தீர்மானம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பங்குபற்றலுடன் கூடிய வாழ்க்கை செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவிலேயே எடுக்கப்பட்டதாகும்.
இன்று ஜனாதிபதி ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்த தீர்மானத்திற்கான பொறுப்பை அமைச்சர் உதய கம்மன்பில மீது சுமத்தி , அரசாங்கத்தை மக்கள் மத்தியில் அநாவசிய நெருக்கடிக்குள் தள்ளியுள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் எடுக்கப்பட்ட தீர்மானம் சவாலுக்கு உட்படுத்தி , அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் காணப்படுவதாக சித்தரித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஊடாக அரசாங்கம் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இழக்க நேரிடும் என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
இவ்வாறான செயற்பாடுகளை தோல்வியடைச் செய்வது ஜனாதிபதி மற்றும் பிரதமரின் பொறுப்பாகும் என்று தெரிவித்துக் கொள்கின்றோம்.