தமிழ்தேசிய கூட்டமைப்பினரை ஜனாதிபதி கோட்டாபாயராஸபக்ஷ சந்திக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்ட போதும் கூட அந்த சந்திப்பு காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையிலேயே இலங்கைக்கான இந்தியத்தூதுவருடன் கூட்மைப்பு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டிருந்தது.
இந்நிலையில் குறித்த ஜனாதிபதியுடனான சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக ஐக்கியமக்கள் சக்தி தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
கடந்த காலத்தில் பல தடவைகள் கூட்டமைப்பை பேச்சுக்கு அழைத்து ஏமாற்றியவர்கள்தான் ராஜபக்சக்கள். இப்போது பேச்சு என்று அறிவித்துவிட்டு அதனை நடத்தாமலேயே ஒத்திவைத்துள்ளனர். என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
ராஜபக்ச அரசு புதிய அரசமைப்பை ஒருபோதும் கொண்டுவராது. தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும் ஒருபோதும் வழங்கவும் மாட்டாது. இது வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கும், அவர்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் தெரிந்த விடயம்.
ராஜபக்சக்களின் கடந்த ஆட்சியில் பேச்சு மேசைகளுக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பல தடவைகள் அழைக்கப்பட்டு இறுதியில் ஏமாற்றப்பட்டனர். அதேபோல் இந்த ஆட்சியில் முதலாவது பேச்சைக்கூட நடத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச ஏமாற்றியுள்ளார்.
முதலாவது பேச்சுக்கு முதல் நாள் காலை அழைப்பு விடுத்த ஜனாதிபதி செயலகம், அன்று மாலையே பேச்சை இரத்துச் செய்துள்ளது என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
பேச்சு இரத்துச் செய்யப்பட்டமைக்கான காரணத்தை ஜனாதிபதி செயலகம் இன்னமும் அறிவிக்கவில்லை. ஆனால், சர்வதேச அழுத்தத்தைச் சமாளிக்கவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை பேச்சுக்கு ஜனாதிபதி அழைத்திருந்தார் என்பது உண்மை. எனினும், இறுதியில் அந்தப் பேச்சை நடத்தாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி ஏமாற்றியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி மலர்ந்தால் தமிழர்களுக்கான தீர்வை நாம் வழங்கியே தீருவோம். கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் தமிழ் மக்களுக்கு எமது கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றியே தீருவார் – என்றார்.