உலகிலேயே ரஷ்யா மற்றும் அமெரிக்கா நாடுகள் அதிகளவில் அணு ஆயுதங்களை வைத்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்வீடன் நாட்டில் உள்ள ஸ்டாக்ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம், பல்வேறு நாடுகளின் அணு ஆயுத குவிப்பு குறித்து, ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எஸ்.ஐ.பி.ஆர்.ஐ. ஆண்டு புத்தகம் 2021′ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இந்த புத்தகத்தில், அமெரிக்கா, ரஷியா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான், இஸ்ரேல், வட கொரியா ஆகிய 9 நாடுகள் அணு ஆயுதங்களை அதிகளவில் வைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகளவில் குவிக்கப்பட்டுள்ள அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 80 என்றும், இவற்றில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆயுதங்கள் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ரஷியா வசமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 6 ஆயிரத்து 375 அணு ஆயுதங்களுடன் உலகிலேயே ரஷ்யா முதலிடத்தில் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக, 5 ஆயிரத்து 800 அணு ஆயுதங்களுடன் அமெரிக்கா 2-வது இடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனா 320 – ஃப்ரான்ஸ் 290 – இங்கிலாந்து 225 – பாகிஸ்தான் 160 – இந்தியா 150 – இஸ்ரேலிடம் 90 மற்றும் வடகொரியா 50 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாக அந்த ஆய்வு அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.