சட்டதிட்டங்கள் அனைவருக்கும் பொதுவானது . நகர்ப்புறங்களில் வாழ்பவனுக்கு ஒரு சட்டம் – கிராமங்களில் வாழபவனுக்கு ஒரு சட்டம் – படித்தவனுக்கு ஒரு சட்டம் – பாமரனுக்கு ஒரு சட்டம் – பணக்காரனுக்கு ஒரு சட்டம் என்றெல்லாம் இயற்ற முடியாது. சட்டம் அது ஒன்று தான். யார் செய்தாலும் அதற்கான தண்டனை ஒன்று தான். ஆனால் நேற்றைய தினம் சமூக வளைத்தளங்களில் வெளியாகியிருந்த படங்கள் பார்ப்போரை கோவப்படச்செய்வதாகவே அமைந்திருந்தது.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து தடைகளை மீறியவர்களிற்கு இராணுவத்தினர் வழங்கிய தண்டனை தனி மனிதர்களுடைய சுயமரியாதையை சிதைப்பதாகவே அமைந்தருந்தது. ஜனநாயக நாடு எனக்கூறிக்கொண்டு தனிமனித சுயமரியாதையை உள்ளிருந்து சிதைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
மட்டக்களப்பு ஏறாவூர் பகுதிகளில் பயணத்தடையினை மீறி செயற்பட்டோர் நேற்று காலை இராணுவத்தினரால் தண்டிக்கப்பட்டனர். அவர்கள் என்ன தேவைக்காக வெளியே வந்தார்கள் என்பது அடுத்த கட்டம். ஏதோ பாடசாலைச்சிறுவர்களுக்கு ஆசிரியர்கள் முழந்தாழிட்டு தண்டனை வழங்குவது போல வழங்கியிருக்கிறார்கள் இராணுவத்தினர். பாடசாலை மாணவர்களுக்கு கூட அப்படியான தண்டணை வழங்கப்படக்கூடாது என வலியுறுத்தி வருகின்றோம்.
தவறு செய்கின்ற எல்லோராரையும் உங்களால் இப்படி தண்டிக்க முடியுமாயின் வரவேற்கத்தக்கது. ஆனால் அப்படியில்லையே. உயர் இடங்கள் என்றாலோ – எதிர்கக்கூடிய மக்கள் கூட்டம் எனறாலோ ஒதுங்கி விடுகின்றீர்கள். சாதாரண மக்கள் என்றால் எகிறி பாய்கின்றீர்கள். அண்மையில் தென்னிலங்கையில் தடுப்பூசி வழங்கிக்கொண்டிருக்கும் போது அனைத்துமக்களும் வரிசையில் நின்று தடுப்பூசி பெற்றுக்கொண்டிருந்த போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் மனைவி முண்டியடித்துக்கொண்டு தடுப்பூசியை பெற்றுக்கொண்டார். இதே சட்டம் அங்கு தூங்கிக்கொண்டு தான் இருந்தது.
முகக்கவசம் அணியாத சாதாரண மக்களை பொது இடங்களில் வைத்து அவர்களினுடைய சுயமரியாதையை கவனத்தில் எடுக்காது ஏதோ தெருநாய்களை பிடிப்பது போல அள்ளிக்கொண்டு சென்றது இந்த நாட்டு காவல்துறையும் – பொலிஸாரும் தான். ஆனால் அமைச்சர் சரத்வீரசேகர முகக்கவசம் அணியாது ஒரு பொது நிகழ்வில் பங்கு பற்றிய போது அவருக்கு இதே இராணுவம் தலைகுனிந்து வணக்கம் சொன்னது. அவரை இப்படி அமர வைத்திருக்கலாமே..? முடியாது. அங்கு எல்லாம் சட்டம் பாயாது.
இவ்வளவு ஏன் கொரோனா தீவிரமாக பரவிக்கொண்டிருந்த போது தம்மிக பண்டார என்பவர் கேகாலையில் கொரோனாவுக்கான பாணி மருந்து விற்ற போது சமூக இடைவெளியின்றி ஆயிரக்கணக்கில் சிங்கள மக்கள் குவிந்தனர். முக்கியமாக சுகாதார அமைச்சர் கூட அங்கு சென்று குறித்த பாணியை வாங்கி அருந்தி சிறுபிள்ளைத்தனமாக செயற்பட்டார். அங்கு யாரையும் கைது செய்யவுமில்லை. கட்டுப்படுத்தவுமில்லை இந்த அதிகாரிகள்.
இது போக மேல் மாகாணத்தில் பயணத்தடை கணக்கேயில்லாமால் வழமையான நாட்கள் போலவே இயங்கிக்கொண்டிருக்கின்றது. அங்கே சட்டம் இல்லை- இராணுவமும் இல்லை போலும்.
இங்கு பிரச்சினை சரத்வீரசேகரவோ – மேல்மாகாணமோ – தம்மிக பண்டாரவோ அல்ல. அவர்கள் எல்லோருக்கும் சட்டம் செல்லுபடியற்றது எனின் எல்லா இடங்களுக்கும் அதுதான் சட்டமாக இருக்க வேண்டும். இதை விடுத்து ஒரு சில இடங்களில் மட்டும் கொரோனா கட்டுப்பாடு என கூறி தனிமனித சுதந்திரம் மறறும் சுயமரியாதை பறிக்கப்படுவதை ஏற்றுக்ககொள்ள முடியாது.
பயணத்தடை காலங்களில் வெளியே செல்வது தவறு எனின் யார் சென்றாலும் தவறு தானே. எல்லோரையு் கட்டுப்படுத்துவீர்களா என்றால் முடியாது. இலங்கையில் ஓரளவாவது கொரோனா கட்டுப்பாட்டுக்குள் இருப்பதற்கு இராணுவத்தினரின் கண்காணிப்பும் காரணம் தான் மறுக்க முடியாது.
ஆனால் தனிமனிதரை அவமானப்படுத்தும் – மன நோகடிக்கும் தண்டனைகளுக்கு இடமில்லை என இலங்கையின் அரசியலமைப்பு வலியுறுத்துகின்றது. அரச காவல்துறையினருக்கும் – இராணுவப்பிரிவினருக்கும் முதலில் அரசியலமைப்பில் உள்ள மனித உரிமைகள் தொடர்பான அறிவை வழங்கிவிட்டு அவர்களை பணிக்கமர்த்த வேண்டும். அப்போது தான் தன்னை ஜனநாயக நாடு என குறிப்பிடும் இலங்கை அதற்கான – அந்த ஜனநாயகத்தை அடைவதற்கான பாதையை நோக்கி கொஞ்சமாவது முன்னேற முடியும்.