“சஜித் பிரேமதாசாவை வீழ்த்தி, ரணில் விக்கிரமசிங்க எதிர்க்கட்சித் தலைவராவார் என்பதெல்லாம் ஆகப்போவதில்லையென மனோ கணேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றம் வருவது தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் மேலோங்கியுள்ள நிலையில் ஆளும்தரப்பினரும் – எதிர்க்கட்சியினரும் ரணிலின் வருகை தொடர்பாக தத்தமது பங்குக்கு பேசிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையிலே இது பற்றி பேசிய மனோகணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறிய போது,
ரணில் விக்கிரமசிங்க என்பவர் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி. சில வருடங்கள் பிரதமராகவும் பல வருடங்கள் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தவர். அவர் மீண்டும் பாராளுமன்றம் வருகிறார் என்பது ஒரு பரபரப்பான செய்தி மட்டுமே. அதைவிட, அவர் வந்து, சஜித்தை வீழ்த்தி, எதிர்கட்சித் தலைவர் ஆவது என்பதெல்லாம் வெறும் கட்டுக் கதை தான். அதெல்லாம் ஆகப்போவதில்லை.
இன்றைய ராஜபக்ஷ அரசுக்கு மாற்றாக, சஜித் தலைமையிலான மாற்றுக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க, அவர் தனது எஞ்சியுள்ள தகைமைகள் மூலம் வேண்டுமானால் பங்களிக்கலாம். அவர் பங்களிக்க வேண்டுமென விரும்புகிறேன்.
2009இல் யுத்தம் முடிந்து, 15 ஆண்டுகளுக்குப் பிறகு 04ஆம் முறையாக வரும் ஆட்சி மாற்றத்தை, தேசிய மாற்றாக, தமிழ், முஸ்லிம் மக்கள் சார்பாக நம் அரசியலை மிக கவனமாக கையாள வேண்டும் என்பதே என் கடைசி அவா என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.