இலங்கையில் கொரோனா பரவல் கொஞ்சம் கூட கட்டுப்படுத்தப்படாத நிலையில் இன்றைய தினம் நாடு திறக்கப்பட்டது. எல்லா இடங்களிலும் மக்கள் கூட்டம் கூட்டமாக புற்றீசல்களை போல கொரோனா – சமூக இடைவெளி எதைப்பற்றியும் சிந்திக்காது பொருட்களை கொள்வனவு செய்வதில் அதீத ஆர்வம் காட்டியு்ளனர்.
இதற்கிடையில் அரசின் நிலைப்பாடு தொடர்பாகவும் – அரசு கொரோனா விடயத்தில் தோற்றுவிட்டதாகவும் வெட்டிப்பேச்சு பேசிய நூற்றுக்கணக்கானோருடைய சமூகப்பொறுப்பு தெளிவாக இன்றைய தினம் தெரிந்தது. முக்கியமாக மதுபானக்கடைகளிலும் கூட்டம் நிறைந்து வழிந்தது. வடக்கின் முக்கியமான நகரங்களில் அளவுக்கதிகமான மதுபானக்கொள்வனவில் ஈடுபட்டோர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டும் – எச்சரிக்கப்பட்டுமுள்ளனர். இதெல்லாம் பெருமையாக சொல்லக்கூடிய விடயங்கள் அல்ல. வெட்கித்தலை குனிய வேண்டிய விடயங்கள். ஆனால் நமது இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் இந்த தகவல்களை பதிவிட்டு நகைப்பாக கடந்து செல்வது வேதனை தருகின்றது.
இது ஒருபக்கமிருக்க நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 52 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 2,633 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பயணத்தடை முழுமையாக அமுலில் இருந்த காலமான ஜூன் மாதம் முதலாம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை மொத்தம் 53 ஆயிரத்து 331 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. முக்கிய குறிப்பு நாட்டை திறந்து விட்டிருந்த காலங்களில் கூட நாளொன்றுக்கு சராசரியாக 1000 வரையான தொற்றாளர்களே அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அரசாங்கத்திடம் வேறு வழியில்லை. திறைசேரி வெறுமையாகிவிட்டது. நாடு முழுக்க கடனில் தான் ஓடுகின்றது என அரசு தரப்பு அறிவித்தாகி விட்டது. இது நாம் ஒவ்வொருவரும் பொறுப்புணர்ந்து செயற்பட வேண்டிய காலம். இன்றைய தினமும் சரி – பயணக்கட்டுப்பாட்டு காலங்களிலும் சரி கடைகளில் அலை மோதிய கூட்டம் பணம் உள்ள கூட்டம். அவர்களுக்கு தங்களை பாதுகாத்துக்கொள்ளக்கூடிய அளவிற்கு பண பலமும் உள்ளது – பொருளாதார வலிமையும் உள்ளது.
ஆனால் நாட்கூலிகளை நினைந்து பாருங்கள். திறந்திருந்தால் தான் அவர்கள் தங்களுக்காக ஏதாவது செய்ய முடியும். அதற்கு நாடு முழுமையாக இயல்பான நிலைக்கு திரும்புவது அவசியம். சற்று நாம் பொறுப்புடன் செயற்பட பழக்கப்படுத்திக்கொள்வோம். இருப்பவர்கள் தான் மேலும் மேலும் பொருடகளை வாங்கிக்குவித்து கொரோனாவை பரப்புகின்றோம். கொரோனா தொகை அதிகரிக்க அதிகரிக்க நாடு முடங்கும். நாடு முடங்கினால் உள்ளவன் வாழ்வான். இல்லாதவன் ..? என்ன செய்வான்..! சற்று சமூக சிந்தனையுடன் செயலாற்றுங்கள்.
இந்த பயணத்தடை காலங்களில் கூட வெளியே சுற்றித்திரிந்தவர்கள் இருக்கக்கூடிய வசதிபடைத்தவர்கள் தான். இல்லாதவன் தான் வீட்டிலே படுத்துக்கிடந்து என்ன செய்வதென தெரியாது இல்லாமையை நினைந்து நொந்துகொணடிருந்தவன். அவன் வெளியே வந்தால் கொரோனா பயம் ஒருபக்கம் – பொலிஸார் – இராணுவத்தினர் பயம் இன்னொரு பக்கம். பாவம் வேறு வழி தெரியாது அவர்கள் போராட்டத்தில் இறங்கி வாய்விட்டு உணவு கேட்கும் கொடுமைக்கு ஆளாக்கிவிட்டோம். புரிந்து கொள்ளுங்கள்.
குறித்து வைத்துக்கொள்ளுங்கள் கொரோனாவால் சாவது எல்லாம் ஒரு விடயமேயில்லை – நம் கூடவே வாழும் ஒருவன் பசியால் இறந்தான் என்றால் அது போல வேதனையான விடயம் வேறெதுவும் இல்லை. அந்தப்பாவத்துக்கு நாம் ஒவ்வொருவருமே பொறுப்பேற்க வேண்டும்.