வவுனியா விலுள்ள பெரும்பாலான பாடசாலைகள் காலவரையறையின்றி மூடப்பட்டு, அவை, வன்னியிலிருந்து இடம் பெயர்ந்து வருவோருக்கான நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டுள்ளன. வவுனியா தமிழ் மகா வித்தியாலயமும் இந்துக் கல்லூரியும் புதன்கிழமை முதல் மூடப்பட்டு நலன்புரி நிலையங்களாக மாற்றப்பட்டு அங்கு இடம்பெயர்ந்த பெருமளவு மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
காமினி வித்தியாலயம், முஸ்லிம் மகா வித்தியாலயம், பூந்தோட்டம் பாடசாலை, கல்வியியற் கல்லூரி, நெளுக்குளம் தொழில்நுட்பக் கல்லூரி, பம்பைமடு வளாகவிடுதி, செட்டிகுளம் பாடசாலை மற்றும் மெனிக்பாம் பகுதிகளில் 18 ஆயிரத்து 678 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் சமைத்த உணவுகளே வழங்கப்படுகின்றன. பஸ்கள் மூலம் கொண்டுவரப்பட்ட மக்கள் தமிழ் மகா வித்தியாலயத்திலும், இந்துக் கல்லூரியிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்தப் பாடசாலைகளின் மைதானங்களில் தற்காலிக குடிசைகள் அமைக்கும் வேலைகளும் நடைபெறுவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.
அடுத்த சில தினங்களில் மேலும் பெரும் எண்ணிக்கையானோர் வரும் பட்சத்தில் அவர்களை தங்கவைத்துப் பராமரிக்க பெரும் இடையூறுகளை அதிகாரிகள் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். இடநெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள பாடசாலை மாணவர்களின் கல்வி நிலை பெரும் கேள்விக்குறியாகவே உள்ளது. இது குறித்து பெற்றோரும் கவலை தெரிவிக்கின்றனர். இடம்பெயர்ந்து வந்துள்ள மக்கள் தங்கியுள்ள பாடசாலைகளை மீளவும் ஆரம்பிக்க குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு மேல் செல்லுமெனத் தெரிவிக்கப்படுகிறது.
இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி, சைவப்பிரகாச வித்தியாசாலை, திருச்சபை வித்தியாலயம், பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரி மட்டுமே தற்போது இயங்குகின்றன. நகரிலுள்ள ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் நலன்புரி நிலையங்களாக இயங்குவதும் குறிப்பிடத்தக்கது.